2016-07-18 16:35:00

பாதிக்கப்பட்டவர்களுக்கு குணமளிப்பதில் மரணதண்டனை உதவுவதில்லை


ஜூலை,18,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் மரணதண்டனையை அகற்றும் சட்டப் பரிந்துரைக்கு தங்கள் முழு ஆதரவை வெளியிட்டுள்ளனர் அப்பகுதி ஆயர்கள்.

மரணதண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனையை வழங்கலாம் என்ற பரிந்துரை வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ஆதரிக்க, அனைத்து கலிபோர்னியா மக்களும் முன்வரவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர், கலிபோர்னியா ஆயர்கள்.

மரணதண்டனையை சமூகத்திலிருந்து முற்றிலுமாக அகற்றவேண்டும் என்ற உறுதிப்பாடு, தங்களின் கத்தோலிக்க விசுவாசத்திலிருந்தும், மேய்ப்புப்பணி அனுபவத்திலிருந்தும் பிறந்துள்ளது எனவும், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர், ஆயர்கள்.

இறைவனின் சாயலைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனையும் காக்கவேண்டியது நம் கடமை, ஏனெனில் இயேசு கூறியதுபோல், மனிதனை அன்புகூர்பவர்களாலேயே இறைவனையும் அன்புகூரமுடியும் என கூறியுள்ளனர் ஆயர்கள்.

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குணமளிப்பதில், மரணதண்டனை எவ்வகையிலும் உதவுவதில்லை எனக் கூறும் கலிபோர்னியா ஆயர்கள்,  மரணதண்டனைகளுக்கெனச் செலவிடப்படும் அரசுப் பணம், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.