2016-07-18 16:13:00

திருத்தந்தை : ஒருவருக்கொருவர் செவிமடுப்பது, அமைதிக்கான வழி


ஜூலை,18,2016. நம்மைக் காணவரும் விருந்தினர்களுக்கு பணிபுரிந்து, உணவளிப்பது மட்டும் போதாது அவர்களுக்குச் செவிமடுத்து, அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களை நம்மில் ஒருவராக உணரவைக்க வேண்டியது அவசியம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளை இயேசு காணச் சென்றபோது இடம்பெற்ற உரையாடலை விவரிக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணிவிடைப் புரிவதில் அதிகக் கவனமாக இருந்த மார்த்தாவையும், இயேசுக்கு செவிமடுக்கும் நோக்கில் அவர் காலடியிலேயே அமர்ந்து விட்ட மார்த்தாவின் சகோதரி மரியாவையும் குறித்து இயேசு கூறிய வார்த்தைகளில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை எடுத்துரைத்து, முதலில் விருந்தினருக்கு செவிமடுத்து, அவரை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றார்.

இரு சகோதரிகளும் இயேசு எனும் விருந்தினரை தங்களுக்கே உரிய வழிகளில் வரவேற்றனர், ஆனால் மரியாவோ, இயேசுவின் இருப்பை புரிந்துகொண்டு அவருக்கு செவிமடுப்பதில் முக்கியத்துவம் காட்டினார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் செபமும் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், இயேசுவுக்கு செவிமடுப்பதாக இருக்க வேண்டும், ஏனெனில் அவரின் வார்த்தைகளே நம்மை ஒளிர்விக்கின்றன எனவும் கூறினார்.

விருந்தினர்கள் தங்கள் சொந்த வீட்டில் இருப்பதுபோல் உணரவேண்டுமெனில், முதலில் அவர்களுக்கு நாம் செவிமடுக்கவேண்டியது அவசியம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கச் செயல்பாடுகளுள் ஒன்றான 'உபசரிப்பு', மனிதகுல மற்றும் கிறிஸ்தவ நற்பண்புகளுள் ஒன்றாக இருப்பினும், அது பலவேளைகளில் புறக்கணிக்கப்படுகிறது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளிகளையும், வறுமையிலும் தனிமையிலும் வாடுவோரையும் பராமரிப்பதற்கென பல இல்லங்கள் கட்டப்பட்டு வருகின்றபோதிலும், மக்களின் துயர்களுக்கு பொறுமையாக செவிமடுக்கும் போக்கு குறைந்து வருகிறது என்ற கவலையையும் வெளியிட்டார்.

விருந்தினர்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் உள்ள ஒவ்வொரு உறவுக்கும் செவிமடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் செவிமடுக்கும் மனப்பான்மையே, அமைதிக்கான வழியைத் திறந்துவிடுகிறது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.