2016-07-18 16:27:00

இலங்கை எதிர்க்கட்சி தலைவர், மன்னார் முன்னாள் ஆயர் சந்திப்பு


ஜூலை,18,2016. இலங்கையின் மன்னாரில் பயணம் மேற்கொண்ட அந்நாட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்கள், மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர், இராயப்பு ஜோசப்பு அவர்களைச் சந்தித்து, நலம் விசாரித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் ஆயர் இல்லத்திற்குச் சென்றிருந்தார்.

முதலில் ஆயர் இல்லத்திற்குச் சென்ற எதிர்க் கட்சித்தலைவர் உள்ளிட்ட குழுவினர், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் கிங்ஸ்லி சுவாமி பிள்ளை  அவர்களை சந்தித்து உரையாடியதோடு ஆசியும் பெற்றனர்.

பின்னர், ஓய்வு பெற்ற முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இச்சந்திப்பின்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் இராயல் இம்மானுவேல், ஆயரின் செயலாளர் அருள்பணி முரளிதரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்தபோது, இனம் தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் காவல் நிலையத்தில் முறையீடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்தபோது நடந்த இத்தாக்குதலால், ஆலயத்தின் ஓடு உடைந்து,  திருப்பலியில் கலந்து கொண்டிருந்த சிறுமி மீது விழுந்து சிறுமி காயமடைந்துள்ளார்.

இக்கல்வீச்சுத் தாக்குதல் குறித்து அப்பகுதியில் விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதாரம் : TamilWin / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.