2016-07-18 15:41:00

இது இரக்கத்தின் காலம் : இறைவனுக்கு விருப்பமான கொடை


தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி முடித்த இராஜ இராஜ சோழன், பெரிய கர்வத்தில் இருந்தாராம். அன்று இரவு அவருக்கு கனவிலே சிவபெருமான் வந்தார். சுவாமி, தாங்கள் தங்குவதற்கு கோவில் வசதியாக இருக்கின்றதா என்று கேட்டார் அரசர். ஏதோ, அந்த மூதாட்டி கொடுத்த நிழலில் ஒதுங்கி இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார் சிவபெருமான். அரசருக்கு தூக்கம் போய் துக்கம் நிறைந்துவிட்டது. மறுநாள் அது பற்றி தீவிரமாக விசாரித்தபோது ஓர் உண்மை தெரிய வந்தது. தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தைக் கட்டிக் கொண்டிருந்த சிற்பிகளுக்கு ஒரு வயதான பெண் நாள்தோறும் இலவசமாக மோர் கொடுத்திருக்கிறார். கோவிலுக்குத் தன்னாலான உதவி என்று சொல்லிக்கொண்டு அங்கே கிடந்த ஒரு சதுரமான கல்லில் உட்கார்ந்துகொண்டு இந்த அறப்பணியைச் செய்திருக்கிறார் அந்த முதியவர். இந்த மூதாட்டிக்குத் தாங்கள் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த சிற்பிகள் அவரிடமே, உங்கள் நினைவாக, இந்தக் கோபுரத்தில் ஏதாவது வைக்க வேண்டும், இறைவனுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார்கள். “கடவுளுக்குக் கொடுக்கிறதுக்கு எங்கிட்ட என்ன இருக்கு?” என்று சொன்ன அந்த முதியவர், தான் உட்கார்ந்திருந்த அந்தக் கல்லைப் பார்த்து, “இதுதான் இருக்கு, வேணும்னா எடுத்துக்குங்க” என்றார். அச்சமயத்தில் கோபுரத்தில் நான்கு பக்க வேலை முடிந்து மேலே காலியாக இருந்திருக்கிறது. அதைக் கல்போட்டு மூட வேண்டும். அதனால் சிற்பிகள் அந்த வயதானவர் கொடுத்த கல்லை மேலே கொண்டுபோய், உள்ளே சிவபெருமான்மீது வெயில் படாதபடி மூடினார்கள் என்று சொல்லப்படுகிறது. கர்வம்கொண்ட இராஜ இராஜ சோழரின் கொடையைவிட, பணிவுமிக்க அந்த வயதானவரின் கொடைதான் இறைவனுக்குப் பிடித்திருந்தது. அதுதான் இறைவனுக்கு நிழலாகி விட்டது. ஆம். கொடைகளை வழங்கும்போது கர்வம் கூடாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.