2016-07-16 13:49:00

பொதுக்காலம் - 16ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


அருள்பணியாளராவதற்கு பயிற்சி பெற்றுவந்த ஆண்டுகளிலும், அருள்பணியாளரான பின்னரும் மக்கள் எனக்கு வழங்கியுள்ள கொடைகள் பல. அவற்றில், இன்று நான் சிறப்பாக எண்ணிப்பார்க்க விழைவது... எனக்கு அறிமுகமான, அறிமுகம் இல்லாத இல்லங்களில் எனக்குக் கிடைத்த வரவேற்பும், விருந்தும்.

விருந்தோம்பலைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் (தொடக்க நூல் 18: 1-10; லூக்கா 10: 38-42) வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளன. எனக்குக் கிடைத்த பல்வேறு விருந்து அனுபவங்களையும், இன்றைய வாசகங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, ஒரு சில எண்ணங்கள் மனதில் எழுகின்றன. வசதி நிறைந்த செல்வந்தர்கள், நடுத்தர வருமானம் உள்ளவர்கள், வசதியற்ற வறியோர் என்று, சமுதாயத்தின் பல நிலைகளில் இருந்தவர்களின் இல்லங்களில் விருந்துண்ணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒப்புமைப்படுத்துவது நல்லதல்ல என்பதை நான் அறிவேன். இருந்தாலும், செல்வம் மிகுந்தோர் படைத்த விருந்துகளையும், வறியோர் இல்லங்களில் பகிர்ந்த விருந்தையும் இணைத்துச் சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை.

தரமான, வகை, வகையான உணவு பரிமாறப்பட்ட விருந்துகளில், அங்கு பரிமாறப்பட்ட விலையுயர்ந்த பானங்களைப் பற்றியும், ஒரு சில உணவு வகைகளுக்கு ஆன செலவுகள் பற்றியும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அத்தகைய விருந்திலிருந்து திரும்பிய பிறகு, எனக்குள் ஒரு கேள்வி எழுந்ததுண்டு. இன்று நான் கலந்துகொண்ட விருந்தில், விருந்தினர் முக்கியத்துவம் பெற்றனரா, அல்லது, விருந்து முக்கியத்துவம் பெற்றதா என்பதுதான் அந்தக் கேள்வி.

வசதிகள் அதிகமில்லாதவர்கள் இல்லங்களில் விருந்துண்டு வந்தபின்னர், அங்கு என்ன சாப்பிட்டேன் என்பதுகூட நினைவில் இருக்காது. ஆனால், அவர்களுடன் செலவழித்த நேரம், மனதிற்கு நிறைவைத் தந்துள்ளது. ஒரு சில இல்லங்களில், நான் அங்கு செல்வதற்கு முன்னரே, எனக்கு என்ன வகையான உணவு பிடிக்கும், அல்லது, ஒத்துப்போகும் என்பதை, நேரடியாகவும், மறைமுகமாகவும் அறிந்துகொள்ளவும், அந்த உணவைத் தயாரிக்கவும் அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறை, என்னை நெகிழ வைத்துள்ளது. இவ்வில்லங்களில் விருந்தைவிட, விருந்தினர் முதன்மை பெறுவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

விருந்து முக்கியமா, விருந்தினர் முக்கியமா என்ற கேள்விக்கு பதில் தருவதுபோல் அமைந்துள்ளது, இன்றைய நற்செய்தி (லூக்கா 10: 38-42). விருந்தினராக வந்திருந்த இயேசுவுக்கு வகை, வகையாக உணவு தயாரிப்பதில் முனைப்புடன் இருந்தார், மார்த்தா. அவருக்கு இயேசு முக்கியம்தான். ஆயினும், அவருக்குக் கொடுக்கவிருக்கும் விருந்து, மார்த்தாவின் எண்ணங்களை அதிகம் நிறைத்திருந்தது. மரியாவுக்கோ, இயேசு முக்கியமாகிப் போனார். விருந்தா, விருந்தினரா... எது முக்கியம் என்ற கேள்விக்கு இயேசு தரும் பதில்: "மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்; அது அவரிடமிருந்து எடுக்கப்படாது" (லூக்கா 10: 42)

நற்செய்தி சொல்லித் தரும் பாடங்களைப் போலவே, தொடக்க நூலில் நாம் வாசிக்கும் நிகழ்வும் (தொடக்க நூல் 18: 1-10) விருந்தோம்பலைப் பற்றி பல பாடங்களைச் சொல்லித் தருகின்றது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் - என்று நம் விருந்தோம்பல் பண்பைப் பற்றி அடிக்கடி நாம் தலையை நிமிர்த்தி, நெஞ்சுயர்த்தி பெருமைப்படுகிறோம். பொதுவாகவே, இந்தியாவுக்கு, சிறப்பாக, தமிழகத்திற்கு வருகை தரும் பலருக்கும் மனதில் ஆழமாய்ப் பதியும் ஓர் அனுபவம், நாம் அவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கு. அதுவும் ஐரோப்பியர், அமெரிக்கர் இவர்களுக்கு இது முற்றிலும் புதிதான ஏன்?... புதிரான அனுபவமாக இருக்கும். மேற்கத்திய, கிழக்கத்திய கலாச்சாரங்களுக்கிடையே அப்படி ஒரு வேறுபாடு. கிழக்கத்திய கலாச்சாரத்தின் பிரதிநிதியாக ஆபிரகாம், விருந்தோம்பல் பாடங்களை நமக்கு மீண்டும் சொல்லித் தருகிறார்.

நாம் வாசிக்கும் தொடக்க நூல் பகுதி, "பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில்"... என்று ஆரம்பமாகிறது. வெப்பம் மிகுதியாகும்போது, மனமும், உடலும் சோர்ந்துபோகும். ஒருவேளை, ஆபிரகாம், அப்படி ஒரு சோர்வுடன் தன் கூடார வாயிலில் அமர்ந்திருந்த நேரத்தில், மூன்று பேர் அவர் முன் நின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாத மூவர்... வழி தவறி வந்திருக்கலாம், வழி கேட்க வந்திருக்கலாம். இப்படி, நேரம், காலம் தெரியாமல் வருபவர்களை, விரைவில் அனுப்பிவிடுவதில் நாம் கவனம் செலுத்துவோம். அதற்குப் பதில், ஆபிரகாம் செய்தது வியப்பான செயல். அங்கு நடந்ததைத் தொடக்க நூல் இவ்விதம் விவரிக்கின்றது:

தொடக்க நூல் 18 : 1-5

பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே... நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள்...” என்றார்.

ஆபிரகாம் காலத்துக் கதை இது. நம் காலத்து கதை வேறு. ஆபிரகாம் வாழ்ந்த காலத்தையும், நாம் வாழும் இந்தக் காலத்தையும் ஒப்பிடுவது தவறு என்பது எனக்குத் தெரிகிறது. ஆனாலும், அன்று, அங்கு நடந்தது, இன்றைய நம் சூழலுக்குத் தேவைப்படும் ஒரு சில பாடங்களையாவது சொல்லித்தரும் என்பதை நாம் மறக்கக்கூடாது. மறுக்கக்கூடாது. முதலில்... முன்பின் தெரியாதவர்களை, வீட்டுக்குள் வரவழைத்து, விருந்து கொடுப்பதைப்பற்றிச் சிந்திக்கலாம்.

பெரு நகரங்களில் வாழ்பவர்களாக நாம் இருந்தால், வீட்டின் அழைப்பு மணி அடித்ததும், கதவைத் திறப்பதற்கு முன், ஒரு துளைவழியே வெளியில் இருப்பவரைப் பார்ப்போம். கொஞ்சம் அறிமுகமானவர் போல் தெரிந்தால், சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவை, சிறிதளவு திறப்போம். வெளியில் இருப்பவர் வீட்டுக்குள் வரலாமா வேண்டாமா என்ற தீர்மானத்தை அந்தச் சிறு இடைவெளியில் எடுப்போம். ஒருவரை வீட்டுக்குள் அனுமதிப்பதற்கே இத்தனை தயக்கம் இருக்கும் நம் சூழ்நிலையில், அவருக்கு விருந்து படைப்பது என்பது, எட்டாத கனவுதான்! விருந்தோம்பல் என்பது கற்பனையாய், கனவாய் மாறிவருவது, உண்மையிலேயே, நம் தலைமுறை சந்தித்துவரும் பெரும் இழப்புதான்.

ஆபிரகாம் கதைக்கு மீண்டும் வருவோம். வழியோடு சென்றவர்களை, வலியச்சென்று அழைத்து வந்து விருந்து படைக்கிறார் ஆபிரகாம். அதுவும், வீட்டில் எதுவும் தயாராக இல்லாதபோது இப்படிப்பட்ட ஒரு விருந்து. விருந்தினர்கள் வீட்டுக்கு வந்த பிறகுதான் ஏற்பாடுகளே நடக்கின்றன. ஓர் எளிய, அல்லது, நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஒரு காட்சி நம் கண் முன் விரிகிறது.

தனக்கோ, தன் குடும்பத்திற்கோ நல்ல உணவு இல்லாதபோதும், விருந்தினர்களுக்கு நல்ல உணவைப் பரிமாறுபவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் வந்துவிடும் விருந்தினருக்கு, வீட்டில் ஒன்றுமில்லாத நிலையிலும், தன் மகனை அடுத்த வீட்டுக்கு அனுப்பி, அல்லது வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் கடனைச் சொல்லி ஒரு பழரசமோ, காப்பியோ வாங்கிவந்து கொடுக்கும் எத்தனை பேரை நாம் பார்த்திருக்கிறோம். அல்லது, எத்தனை முறை இப்படி நாம் நடந்து கொண்டிருக்கிறோம்? தங்கள் செல்வத்தைப் பறைசாற்றச் செய்யப்படும் முயற்சி அல்ல இது. தங்கள் அன்பை, பாசத்தை வெளிப்படுத்துவதே, இந்த முயற்சி. அருள்பணியாளராக என்னை வரவேற்று, இவ்விதம் அன்பு விருந்தளித்த அனைவரையும் இன்று இறைவன் சந்நிதியில் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

அன்பைப் பறைசாற்றும் இத்தகைய விருந்துகளைப்பற்றிப் பேசும்போது, தன்னிடம் உள்ள செல்வத்தைப் பறைசாற்ற, அதை ஏறக்குறைய ஓர் உலகச் சாதனையாக மாற்ற முயற்சிகளில் ஈடுபடும் பல செல்வந்தர்களின் விருந்துகளையும் இங்கு சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. உலகத்திலேயே இதுவரை நடந்த திருமணங்களில் மிக அதிகச் செலவுடன் நடத்தப்பட்ட திருமணங்கள் என்ற பட்டியலை இணையதளத்தில் தேடிப்பார்த்தால், வேதனையான அதிர்ச்சிகள் அங்கு நமக்குக் காத்திருக்கும்.

2004ம் ஆண்டு உலகின் மிகப் பெரும்... மிக, மிக, மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவர், தன் மகளுக்கு நடத்திய திருமண விருந்து, உலகச் சாதனையாகப் பேசப்படுகிறது. அந்த விருந்துக்கு ஆன செலவு 78 மில்லியன் டாலர்கள்... அதாவது, அன்றைய நிலவரப்படி, ஏறத்தாழ 400 கோடி ரூபாய். விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் 1000க்கும் குறைவானவர்கள். 1000 விருந்தினருக்கு ஆனச் செலவைக்கொண்டு, இந்தியாவில் 40 கோடி வறியோர், ஒரு வேளை உணவை வயிறாரச் சாப்பிட்டிருக்கலாம். அந்த விருந்தில் வீணாக்கப்பட்ட உணவை மட்டும் கொண்டு, கட்டாயம் 10 கோடி ஏழை இந்தியர்களின் பசியைப் போக்கியிருக்கலாம். ஏன் இந்த விருந்தையும் இந்தியாவையும் முடிச்சு போடுகிறேன் என்று குழப்பமா? இந்த விருந்தைக் கொடுத்த செல்வந்தர் ஓர் இந்தியர். இதற்கு மேலும் என்ன சொல்ல... இந்தியா ஒரு வறுமை நாடு என்று மற்றவர்கள் சொல்லும்போது, அதை ஏற்க மறுப்பவர்களில் நானும் ஒருவன்.

பொறாமையில் பொருமுகிறேனா? இருக்கலாம். ஆனால், வறுமைக் கோட்டிற்குக் கீழ் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிவரும் இன்றைய உலகில், இந்தியாவிலோ, அல்லது உலகின் எந்த ஒரு மூலையிலோ இவ்வகையான அர்த்தமற்ற, ஆடம்பர விருந்துகள் நடப்பது, ஒரு பாவச்செயல் என்பதையும் சொல்லித்தானே ஆகவேண்டும்.  

விருந்துகளைவிட, விருந்தினர்கள் முக்கியத்துவம் பெறும்போது, 'விருந்தோம்பல்' என்ற வார்த்தை இன்னும் பொருளுள்ளதாக, புனிதம் மிக்கதாக மாறும். 'விருந்தோம்பல்' என்ற வார்த்தையைக் கேட்டதும், கட்டாயம் திருவள்ளுவர் நினைவுக்கு வந்திருப்பார். பத்துக் குறள்களில் விருந்தோம்பலின் மிக உயர்ந்த பண்புகளைத் தெளிவாகக் கூறியுள்ளார், திருவள்ளுவர். ஆபிரகாம் மேற்கொண்ட விருந்தோம்பல் நிகழ்வு, எப்படி நடைமுறைக்கு ஒவ்வாத, கற்பனையாய், கனவாய்த் தெரிகிறதோ, அதேபோல், திருவள்ளுவரின் கூற்றுகளும் எட்டமுடியாத உயரத்தில் உள்ள அறிவுரைகளாய்த் தெரியலாம். எட்ட முடியாத தூரத்தில் இருப்பதால் இக்கனவுகளை, புளிப்பு என்று ஒதுக்காமல், வாழ்வில் ஓரளவாகிலும் கடைபிடித்தால்,... இந்த உலகம் விண்ணகமாவது உறுதி.

விருந்தோம்பலைக் குறித்து வள்ளுவர் கூறிய பத்து குறள்களில் ஒன்று, இன்றைய தொடக்க நூல் நிகழ்வுக்கு நெருங்கிய தொடர்பு உடையதைப்போல் தெரிகிறது. வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்தார் ஆபிரகாம் என்று, தொடக்க நூலில் நாம் வாசித்தோம். நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்கொண்டு வாழ்பவர், விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவார் என்பது, வள்ளுவர் கூறிய அழகான கருத்து.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

வானவர் மத்தியில் விருந்தினர் ஆவது போல், வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்த ஆபிரகாமைக் குறித்து புதிய ஏற்பாட்டில் நாம் வாசிப்பது இதுதான்:

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13: 1-2

சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.

உண்மையான விருந்தோம்பலை உயிர்பெறச் செய்யும் மனதை, உலகோர் அனைவருக்கும் இறைவன் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம். நாம் விருந்து படைப்போர் மத்தியில், வானத் தூதர்களும் இருக்கலாம். வானத் தூதர்கள் நம் இல்லங்களுக்கு வந்து நம்மை வாழ்த்திடும் வாய்ப்பு பெறவும், வானத் தூதர்களாக இவ்வுலகில் நாம் மாறவும் வேண்டுமென்று உருக்கமாக மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.