2016-07-15 16:04:00

நீஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்கு திருப்பீடம் கண்டனம்


ஜூலை,15,2016. பிரான்ஸ் நாட்டில் இவ்வியாழன் இரவு இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு, திருப்பீடம் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, இதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டு மக்கள் எல்லாருடனும் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் திருப்பீட அதிகாரிகள் அனைவரும் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

மக்கள் கூட்டத்தின்மீது நடத்தப்படும் கொலைகள், காழ்ப்புணர்வு, பயங்கரவாதம், மற்றும் அமைதிக்கு எதிரான தாக்குதல்கள் என, அனைத்து வன்முறைகளையும் திருப்பீடம் கண்டிக்கின்றது எனவும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் நாட்டின் Bastille தினத்தையொட்டி, நீஸ்(Nice) நகரில், இவ்வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது, மர்ம நபர் ஒருவர், கனரக லாரியை அதிவேகமாகச் செலுத்தியதில் எண்பதுக்கும் மேற்பட்டோர் உடல் நசுங்கி இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் எட்டு மாதங்களுக்கு முன்னதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இதில் காயமடைந்துள்ளவர்களில் 18 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இத்தாக்குதலில் ஒரே ஒரு நபர் மட்டுமே ஈடுபட்டதாகத் தெரிகிறது.

அந்த கனரக லாரியில் பயங்கர ஆயுதங்களும், கையெறி குண்டுகளும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அந்த மர்ம நபரை சுட்டு வீழ்த்தும்முன், அவரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸ் சம்பவத்துக்கு, பிரெஞ்ச் ஆயர்கள், பல தலத்திருஅவைத் தலைவர்கள், கத்தோலிக்க அமைப்புகள், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உட்பட பல நாடுகளின் தலைவர்கள் தங்களின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் மூன்று மாதம் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.