2016-07-15 16:21:00

தென்சீனக் கடல்பகுதி தீர்ப்பு குறித்து பிலிப்பைன்ஸ் ஆயர்கள்


ஜூலை,15,2016. தென் சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என, அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு, இறைவனுக்கு நன்றி கூறியுள்ளனர் பிலிப்பைன்ஸ் ஆயர்கள்.

தென் சீனக் கடல் பகுதியை, சீனா சொந்தம் கொண்டாடி வருவதன் காரணமாக, சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இப்பிரச்சனையை முடிவுக்கு கொணரும் விதமாக, இவ்வாரத்தில் தீர்ப்பளித்துள்ள, நெதர்லாந்து நாட்டிலுள்ள அனைத்துலக நீதிமன்றம், தென் சீனக் கடல் பகுதியில், சீனாவுக்கு உரிமை இல்லை என்றும், அந்தப் பகுதி பிலிப்பைன்ஸுக்குச் சொந்தமானது என்றும் அறிவித்துள்ளது.

சீனாவில் வாழ்கின்ற பிலிப்பைன்ஸ் பணியாளர்கள், இத்தீர்ப்பு குறித்த விவாதங்களில் ஈடுபட வேண்டாமெனக் கேட்டுள்ளார், பிலிப்பைன்ஸ் புலம்பெயர்ந்தவர் ஆணையத் தலைவர் ஆயர் Balanga Ruperto Santos. 

பிலிப்பைன்ஸ் அருகே ஸ்பார்ட்லி பகுதியில் 12 தீவுகள் உள்ளன. இந்தத் தீவுகள் மற்றும் 35 இலட்சம் சதுர கி.மீ பரப்பளவு கடல் பகுதியை, சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதை எதிர்த்து நெதர்லாந்தின் ஹாக் நகரில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்தில் பிலிப்பைன்ஸ் வழக்குத் தொடர்ந்தது. மூன்றரை ஆண்டுகளாக நடந்துவந்த இவ்வழக்குக்குத் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்றும், தென்சீனக் கடல் பகுதியில் விமானப்படைத் தளம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபடுவதற்கு முழு உரிமை உள்ளது என்றும், சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.