2016-07-15 15:40:00

கண்மூடித்தனமான வன்முறை இதயங்கள் மனம்மாற செபிக்கின்றேன்


ஜூலை,15,2016. “நீஸ் நகரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகச் செபிக்கின்றேன்; காழ்ப்புணர்வால் கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபடும் இதயங்கள் மனம்மாற வேண்டுமென்று இறைவனை இறைஞ்சுகிறேன்” என்ற வார்த்தைகளை, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும், இத்தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்கள் மற்றும் பிரான்ஸ் மக்களுடன் Instagram என்ற வலைத்தள செயலியிலும், திருத்தந்தை தனது ஒருமைப்பாட்டையும், செபத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வியாழன் இரவு இடம்பெற்ற இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த திருத்தந்தையின் ஆழ்ந்த கவலை மற்றும் பிரெஞ்ச் மக்களுடன் அவரின் ஆன்மீக ஒருமைப்பாடு போன்றவற்றைத் தெரிவிக்கும் தந்திச் செய்தி ஒன்றை, திருத்தந்தையின் சார்பில் அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

நீஸ்(Nice) மறைமாவட்ட ஆயர் André Marceau அவர்களுக்கு, கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியில், பிரான்ஸ் நாடு தனது தேசிய தினத்தைச் சிறப்பித்துக்கொண்டிருந்தபோது, அந்நாடு கண்மூடித்தனமான வன்முறையால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளது என்றும், இதில் பலியானவர்களில் பலர் சிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய செயல்களுக்கு எதிராக, திருத்தந்தை மீண்டும் கண்டனம் தெரிவிப்பதாகவும், இப்பெருந்துன்பத்தால் தாக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டினர் அனைவர் மீதும் இறையாசீர் பொழியப்படவும், அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற கடவுளின் கொடைகள் வழங்கப்படவும் திருத்தந்தை செபிப்பதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.