2016-07-15 16:02:00

ஈராக்கில் மாதத்திற்கு ஐம்பது சிறார் வீதம் கடத்தல்


ஜூலை,15,2016. ஈராக் சிறாரில் ஐந்து பேருக்கு ஒருவர் வீதம், போரிடும் குழுக்களால் கடத்தப்பட்டு, படைவீரர்களாகச் சேர்க்கப்படுகின்றனர் என்று, யூனிசெப் நிறுவனம் கூறியது.

ஈராக், சிரியா மற்றும் லெபனான் நாடுகளில் பல ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லாமல் சிறார் உள்ளனர் எனவும், இவர்களுக்கு கல்வி வழங்கும் பணியை தாங்கள் ஆற்றி வருவதாகவும், யூனிசெப் நிறுவன உதவி இயக்குனர் Justin Forsyth அவர்கள் கூறினார்.

ஈராக்கில், 2014ம் ஆண்டில் சண்டை தொடங்கியதிலிருந்து, ஏராளமான குடும்பங்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றுரைத்த Forsyth அவர்கள், ஈராக்கில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு அவைகளைச் சீரமைத்து வருவதாகவும், புலம்பெயர்ந்துள்ள சிறார்க்கு கல்வி கற்றுக்கொடுப்பதாகவும் கூறினார்.

ஈராக் சண்டையால், 35 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் தங்களின் பள்ளிகள் மற்றும் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் எனவும் அறிவித்தார் Forsyth.

ஈராக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளில், மாதத்திற்கு ஐம்பது சிறார் வீதம், ஏறக்குறைய 1,496 சிறார் கடத்தப்பட்டுள்ளனர் என்று யூனிசெப் கூறுகிறது.   

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.