2016-07-14 16:12:00

வெந்திமில்லியா முகாம்களில் வாழ்வோர் பற்றி காரித்தாஸ்


ஜூலை,14,2016. இத்தாலியின் வெந்திமில்லியா (Ventimiglia) என்ற இடத்தில் முகாம்களில் வாழும் புலம்பெயர்ந்தோர், மனித மாண்புடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவேண்டும் என்று, ஐரோப்பிய மற்றும் இத்தாலிய காரித்தாஸ் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சூடான், எரித்திரியா, எத்தியோப்பியா நாடுகளிலிருந்து இத்தாலியை அடைந்துள்ள புலம்பெயர்ந்தோர், இத்தாலிக்கும், பிரான்சுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியான வெந்திமில்லியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களுக்கு அடிப்படையான வசதிகள் ஏதும் அமைத்துத் தரப்படவில்லை என்று, காரித்தாஸ் நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

இத்தாலிய காரித்தாஸ், மற்றும் பிரான்ஸ் நாட்டின் Secours Catholique காரித்தாஸ் ஆகிய நிறுவனங்கள் இம்மக்களுக்குத் தேவையான உதவிகளை ஆற்றி வருகின்றனர் என்றும், இம்மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற இன்னும் அதிக உதவிக்கரங்கள் தேவை என்றும் காரித்தாஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.

மனித மாண்புடன் இம்மக்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐரோப்பிய நாடுகள் இவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டும் என்றும், ஐரோப்பிய மற்றும் இத்தாலிய காரித்தாஸ் நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விண்ணப்பித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.