2016-07-14 15:09:00

கடவுளின் கரங்களில் இருக்கிறோம். எதுவும் நடக்காது-திருத்தந்தை


ஜூலை,14,2016. ஜூலை 13, இப்புதன் காலை 9 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை அலுவலகத்திற்கு முன்னறிவிப்பு ஏதுமின்றி சென்று, அங்குள்ள அனைவரையும் சந்தித்தார்.

இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை அலுவலகத்தைச் சார்ந்தவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களைப் பற்றி கலந்தாலோசனை நடத்திய வேளையில், திருத்தந்தை அங்கு திடீரெனத் தோன்றியது, தங்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று, இந்த அலுவலகத்தில் பணியாற்றும் அருள் பணியாளர் Jose Tola அவர்கள் கூறினார்.

இப்புதன் காலை, பல் மருத்துவரைச் சந்திக்கச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்குப் பின், இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை அலுவலகத்தைப் பார்வையிடச் சென்றார்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி நடைபெற்ற இந்த நிகழ்வு, பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை உருவாக்கும் என்று மெய்காப்பாளர்களின் தலைவர் கூறியபோது, "நாம் கடவுளின் கரங்களில் இருக்கிறோம். எதுவும் நடக்காது" என்று திருத்தந்தை தன்னிடம் கூறியதாக, மெய்க்காப்பாளர்களின் தலைவர் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.