2016-07-14 15:16:00

Castel Romano முகாமைப் பார்வையிட்ட கர்தினால் வல்லினி


ஜூலை,14,2016. உரோம் நகருக்கே அருகே உள்ள Castel Romano என்ற முகாமில் தங்கியிருப்போர் மிக மோசமானச் சூழலில் வாழ்கின்றனர் என்று, திருத்தந்தையின் சார்பில், உரோம் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றும் கர்தினால் அகோஸ்தீனோ வல்லினி (Agostino Vallini) அவர்கள் கூறினார்.

ஜூலை 12, இச்செவ்வாயன்று, உரோம் நகருக்கு 26 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள Castel Romano முகாமுக்கு சென்ற கர்தினால் வல்லினி அவர்கள், அந்த முகாமில் நிலவும் சூழல், போர்க் காலத்தில் நிலவும் சூழலைவிடக் கொடுமையாக உள்ளது என்று கூறினார்.

‘உரோமா’ என்றழைக்கப்படும் நாடோடி மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் Castel Romano முகாமை, மூன்று மணி நேரம் பார்வையிட்ட கர்தினால் வல்லினி அவர்கள், இந்த நாடோடி இனத்தவரைக் குறித்து, உரோம் நகர மக்கள் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்களைக் களைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பல நூற்றாண்டுகளாக கலாச்சாரத்தில் வளர்ந்துள்ளதாக பெருமை பெற்றுள்ள உரோம் நகருக்கு அருகே இத்தகையச் சூழல் நிலவுவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறிய கர்தினால் வல்லினி அவர்கள், உரோம் நகரின் பல்வேறு தொழில் மற்றும் தொண்டு நிறுவனங்கள், இம்மக்களை முன்னேற்றும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.