2016-07-13 15:32:00

பேராயர் சிமோவ்ஸ்கி மறைவுக்கு திருத்தந்தையின் இரங்கல் தந்தி


ஜூலை,13,2016. நலப்பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றிவந்த பேராயர் Zygmunt Zimowski அவர்கள், ஜூலை 13, இப்புதன் காலையில், இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வவையின் செயலருக்கு அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

தன்னுடைய நீண்ட, துன்பம் நிறைந்த நோயின் நடுவிலும், பேராயர் சிமோவ்ஸ்கி அவர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியது, ஒரு கிறிஸ்தவ சாட்சிய வாழ்வாக விளங்கியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தந்தியில் கூறினார்.

நலப்பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவராக கடந்த 7 ஆண்டுகள் பணியாற்றிவந்த பேராயர் சிமோவ்ஸ்கி அவர்களின் மறைவால் துயருறும் அவ்வவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தன் ஆழந்த அனுதாபங்களையும், செபங்களையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

1949ம் ஆண்டு, போலந்து நாட்டின் Kupienin எனுமிடத்தில் பிறந்த சிமோவ்ஸ்கி அவர்கள், 1973ம் ஆண்டு, தன் 24வது வயதில் அருள் பணியாளராக பணியாற்றத் துவங்கினார்.

2002ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களால் ஆயராக நியமிக்கப்பட்ட இவரை, அப்போது கர்தினாலாக இருந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஆயராக அருள் பொழிவு செய்தார்.

2009ம் ஆண்டு முதல், நலப்பணியாளர் திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றிவந்த பேராயர் சிமோவ்ஸ்கி அவர்கள், 2014ம் ஆண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

போலந்து நாட்டின் வார்சா நகரில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த அவர், ஜூலை 13, இப்புதனன்று தன் 67வது வயதில் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.