2016-07-13 16:00:00

பிரித்தானியப் பிரதமருக்கு கர்தினால் நிக்கோல்ஸ் வாழ்த்து


ஜூலை,13,2016. ஜூலை 13, இப்புதனன்று, பிரித்தானியப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள தெரேசா மே அவர்களுக்கு, இங்கிலாந்து கர்தினால், வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நடுநிலையான, பதட்டமற்ற மனநிலையும், நீதி, நன்னெறி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுக்கும் தன்மையும் தெரேசா மே அவர்களிடம் தான் கண்ட நற்பண்புகள் என்று கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மனித வர்த்தகம் மற்றும் தற்கால அடிமைத்தனம் இவற்றைக் களைய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், தெரேசா மே அவர்கள், தன்னுடன் வந்து கலந்துகொண்டதையும், மனித வர்த்தகத்திற்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருப்பதையும் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் முடிவை எட்டியுள்ள இவ்வேளையில், பிரதமராகப் பொறுப்பேற்கும் தெரேசா மே அவர்களுக்கு, கத்தோலிக்க மக்களின் செபங்களும் ஆதரவும் உண்டு என்று கர்தினால் நிக்கோல்ஸ் அவர்களின் மடல் உறுதி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.