2016-07-13 16:08:00

பாலஸ்தீனாவை தனி நாடாக ஏற்றுக்கொள்வதே நிரந்தர தீர்வு


ஜூலை,13,2016. இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே, கடந்த 69 ஆண்டுகளாக நீதியான தீர்வு உருவாகாமல் இருப்பது குறித்து, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டார்.

ஐ.நா. அவையில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் பெர்னதித்தோ அவுசா (Bernardito Auza) அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதி, மற்றும் பாலஸ்தீனா பற்றிய கேள்வி என்ற தலைப்பில், இச்செவ்வாயன்று ஐ.நா. பாதுகாப்பு அவையில், உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

பாலஸ்தீனாவை தனி ஒரு நாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நாடுகளும், ஐ.நா. அவையும் கூறிவருவதை முழுமையாக நிறைவேற்றுவது ஒன்றே, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களை முடிவுக்கு கொணரும் என்று பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.

மேலும், சிரியாவில் கிறிஸ்தவர்களும், ஏனைய சிறுபான்மையினரும் அடைந்துவரும் துன்பங்கள் குறித்து திருப்பீடம் பெரும் கவலை அடைந்துள்ளது என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

சிரியாவில் நடைபெற்றுவரும் கட்டுக்கடங்கா வன்முறை குறித்தும், அவற்றை அதிகமதிகமாகத் தூண்டி வரும் போர்கருவி உற்பத்தியாளர்கள் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வன்மையாகக் கண்டித்து வருவதையும், பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் பிறந்து வளர்ந்துள்ள யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் தங்கள் உண்மையான கொள்கைகளைப் பின்பற்றினால், அப்பகுதியில் அமைதியும், ஒப்புரவும் வளரும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையின் இறுதியில் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.