2016-07-13 15:25:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 7


ஜூலை,13,2016.  “இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்” என்று கூறியவர் அருளாளர் அன்னை தெரேசா. ஏழைகளிலும் ஏழைகளுக்கென இவர் ஒரு சபையை ஆரம்பித்து, அதற்கு, Missionaries of Charity அதாவது பிறரன்பு மறைத்தூதர்கள் எனவும் பெயரிட்டார். இப்புதிய சபைக்கென இவரே கைப்பட எழுதிய ஒழுங்குகள் 1950ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அங்கீகாரம் பெற்றன. இந்தச் சபையில் பல இளம்பெண்கள் சேரத் தொடங்கினர். இதில் சேர்வதற்கு மூன்று தகுதிகள் தேவைப்பட்டன. முதலாவது, நலமான உடல், நலமான மனம். இரண்டாவது, நிறையப் பொது அறிவு. மூன்றாவது, பகுத்தறிந்து செய்தல், எப்போதும் புன்னகையுடன் சேவை செய்தல். அன்னையின் சபையில் சேர வந்திருந்த பெண்களும், அந்தத் தகுதிகளைக் கொண்டிருந்து, மிகுந்த மகிழ்வுடனே சபையின் விதிமுறைகளையும் ஏற்றுக்கொண்டனர். சகோதரிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போனது. இதனால் அன்னைக்கு, திருவாளர் கோமஸ் வீட்டிலிருந்து மாற வேண்டிய கட்டாயம். அச்சமயத்தில், ஒரு பாரசீக வர்த்தகரின் பெரிய வீடு ஒன்று விற்பனைக்கு இருப்பதாக அன்னை அறிந்தார். அன்னையும், அருள்பணி வேன் அவர்களும் வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். இருவருக்குமே வீடு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அந்த வர்த்தகர் அவ்வீட்டிற்குக் கூறிய விலைதான் அதிகமாயிருந்தது. பொதுநலப்பணிக்காதலால் விலையைச் சற்றுக் குறைத்துக்கொள்ளுமாறு அன்னை கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த வர்த்தகர், தனது நிலையில் உறுதியாய் இருந்தார். அன்னைக்கு அந்த வீடு அப்போது அவசரமாகத் தேவைப்பட்டதால், அதற்குமேல் பேரம் பேச அவர் விரும்பவில்லை. கொஞ்சம் பணத்தை முதலில் செலுத்தி, வீட்டை வாங்கி விட்டார். பிறகு, மீதிப் பணத்தையும் மிக விரைவிலேயே அடைத்து, கடனைத் தீர்த்துவிட்டார் அன்னை தெரேசா. கொல்கத்தாவின் லோயர் சர்குலர் தெருவில், இலக்கம் 54, ஏ.யில் உள்ள இந்த இல்லமே, அன்றிலிருந்து இன்றுவரை, அன்னையின் பிறரன்பு மறைத்தூதர்கள் சபையினரின் மையப் பணியகமாக விளங்கி வருகிறது. இங்கிருந்துதான் பல கிளை நிறுவனங்களையும் அன்னை ஆரம்பித்தார்.

“மக்களிடையே இரக்கமும், உடன்பிறப்பு உணர்வுப் பாசமுமே மனித வாழ்வில் பெறுவதற்காக முயற்சிக்க வேண்டிய பேருணர்ச்சிகளாகும்” என்று சொன்னார் மார்லி இந்த உணர்வுகளை மிகுதியாகவேக் கொண்டிருந்த அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், தனது சபை சகோதரிகளும் இந்த உணர்வுகளில் வளர வேண்டுமென்பதில் ஆர்வமாய் இருந்தார். விளம்பர வெளிச்சத்தில் பவனிவரும் தலைவர்களைப் பார்த்துப் பழகிவிட்ட இக்காலத்தில், அன்னை தெரேசா ஒரு மாறுபட்ட தலைவராகவே இருந்தார். அவருக்கு விளம்பரங்களே தேவையில்லாமல் போயின. அவரின் ஆரவாரமற்ற பணிகளே அவருக்கு விளம்பரங்களாய் இருந்தன. 1963ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, கொல்கத்தா பேராயரின் ஆசியோடு, அன்னை புதிய கிளை ஒன்றை கொல்கத்தாவில் முதன்முதலாகத் தொடங்கினார். ஆண்களும் தனது பணியில் பங்குகொள்ளும் வண்ணம் இந்தப் புதிய கிளையைத் தொடங்கினார். Brothers of Charity அதாவது பிறன்பின் சகோதரர்கள் என்ற சபையை ஆரம்பித்தார். அதில் இன்று ஆயிரக்கணக்கான சகோதரர்கள் உள்ளனர். இதற்குப் பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும் கிளைகளைத் தொடங்கினார் அன்னை. பின்னர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இச்சபை பரவத் தொடங்கியது. 1950ம் ஆண்டில் பெண்களுக்கென தொடங்கப்பட்ட அன்னை தெரேசா சபையில், 4,500க்கும் மேற்பட்ட சகோதரிகள், 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றுகின்றனர். அன்னை தெரேசா அவர்கள், 1977ம் ஆண்டுக்கு முன்னரே ஒரு நேர்காணலில் தன்னைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்.

“எனக்கு நான் முக்கியமல்ல. ஏழைகள்தான் என் மையம். அவர்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். என்னைப் பற்றிய விபரங்களைச் சொல்வதால் என்ன பயன். ஏழைகள் பண்புடையவர்கள், மிக மிக உயர்ந்தவர்கள் என்பதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏழை மக்களின் உண்மையான தேவை மற்றும் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், தொண்டுபுரியும் நம் கரங்களும், அன்பு காட்டும் நம் நெஞ்சங்களும்தான். இந்தியாவில் அதிகமான வறுமை இருப்பதற்கு என்ன காரணம்? இந்தியா ஓர் ஏழை நாடு என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வறுமைக்குக் காரணம் அறியாமைதான். நாட்டில் இயற்கை வளத்திற்கும், உழைக்கும் கரங்களுக்கும்  பஞ்சமில்லை. இவற்றைச் சரியான வழியில் பயன்படுத்த சராசரி அறிவியல் அறிவு போதாதது. எடுத்துக்காட்டாக, கிராமங்களைவிட்டு, மும்பையின் பிரமாண்டத்தைப் பார்த்து தினம் தினம் குடியேறும் மக்கள், இறுதியில் நடைபாதையில் வாழ்வை முடித்துக்கொள்ளும் கொடுமையைப் பார்த்திருக்கிறேன். தெருவோரங்களில் இறக்கும் மனிதர்கள் பற்றி யாரும் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. இந்த மனிதர்கள்தான் நான் வணங்கும் தெய்வங்கள். அதனால்தான் அவர்கள் எனக்கு முக்கியமானவர்கள். நல்லபடி வாழத்தான் கொடுத்து வைக்கவில்லை, அழகாக இறப்பதற்காவது வாய்ப்புத் தரலாமே என்பதற்காகத்தான் நான் இறப்போர் இல்லத்தைத் தொடங்கினேன். மேலும், சேரிகளில் சிறிய அளவில் பள்ளிகள் நடத்துவது, கைவிடப்படும் குழந்தைகளுக்கு சிசுபவனம், தொழுநோயாளர் இல்லம், மனத்தளவில் வளர்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம், இப்படி சமூகத்தில் மிகத் தாழ்வான நிலையில் இருப்பவர்களுக்கு அன்பும் பரிவும் காட்டுவதே எங்கள் பணி.”

இப்படிப் பகிர்ந்து கொண்டுவந்த அன்னையவர்கள் மேலும் சில கேள்விகளுக்கும் பதில் சொன்னார். “நிதி வேண்டும் என நாங்கள் தேடிப்போவதில்லை. எப்பொழுதும் நன்கொடை வந்தவண்ணம் உள்ளது. எப்படி வருகிறது என்பது எனக்கே புரியவில்லை. தெய்வத்தின் துணையை முழுமையாக நம்புகிறேன். பறவைகளைப் பராமரிக்கும் கடவுள் நம்மைக் கைவிட்டு விடுவாரா என்ன? ஒரு முறை எங்கள் சபை சகோதரி ஒருவர், ஆக்ராவில் புதிதாக இல்லம் தொடங்க வேண்டும், ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டும் என்று எழுதியிருந்தார்கள். என்னிடம் பணம் இல்லை. அந்தப் பணியைத் தொடங்குவது கடவுளுக்கு விருப்பமானால், எப்படியும் அவர் பணம் தருவார் என்று, அந்தக் கடிதம் கிடைத்த அன்றே பதில் கடிதம் எழுதி தபாலிலும் சேர்த்துவிட்டேன். இது நடந்து அரைமணி நேரம் சென்று, statesman பத்திரிகை அலுவலகத்திலிருந்து தலைமை ஆசிரியர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, மனிலாவில் எனக்கு மாக் சே சே விருது வழங்கப் போவதாகச் சொன்னார். அதன் விருதுப் பணம் பத்தாயிரம் டாலர்கள். அது ஆக்ரா பணியகத்திற்குத் தேவையான அளவு கச்சிதமாகப் பொருந்தியது. எனவே எதையும் நான் திட்டமிட்டுச் செய்வதில்லை. பல நாடுகளில் எனது சபையின் பணிகள் இடம்பெறுகின்றன. இந்தத் தலைமைப்பணி, எனக்கு ஒரு சுமையாக இருந்ததில்லை. ஏனெனில் இதனை தெய்வத்தின் பணியாகப் பார்க்கிறேன். இது கடவுளின் பணி. எனவே பிரச்சனைகள் பற்றி நான் கவலைப்பட உரிமையில்லை. அவ்வப்போது வரும் பிரச்சனைகளையும் எனது பணியின் ஓர் அங்கமாகவே பார்க்கிறேன். எனக்குப் பிறகு எனது சபையின் தலைவராக வருபவர் பற்றியும் கவலைப்படவில்லை. என்னைவிட சக்தியிலும் திறமையிலும் குறைந்தவர்களைக்கூட கடவுள் மிக உயர்ந்த கருவிகளாகப் பயன்படுத்த முடியும். கடவுளுக்கு எனது சபை பிடிக்கவில்லையென்றால் அது என் முன்னாலேயே அழியட்டும். ஏனென்றால் கடவுளின் திருப்பணிக்காகவே நாங்கள் இருக்கிறோம். நாம் பெரிய தத்துவங்களைச் சொல்லிவிட்டு ஏழைகளைப் புறக்கணிக்கிறோம். ஆன்மா பற்றிப் பேசுகிறோம், ஆனால் உணவின்றி தவிக்கும் உடல்களை மறந்து விடுகின்றோம்”.

இப்படியெல்லாம் பகிர்ந்து கொண்டுள்ளார் அன்னை தெரேசா. கடைப்பட்டவர்களிடம் தெய்வத்தைக் காண்பது, அதற்குக் கடவுளிடம் முழுமையாகச் சரணடைந்து விடுவது. இதுவே அன்னை தொடங்கிய சபையின் இலட்சியம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.