2016-07-12 16:36:00

தென் சூடானில் இனப்படுகொலை ஏற்படும் ஆபத்து


ஜூலை,12,2016. தென் சூடானில் இனப்படுகொலை இடம்பெறும் ஆபத்து உள்ளது என்றும், அந்நாட்டுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, உலக சமுதாயம் உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும் தலத்திருஅவையின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் விண்ணப்பித்துள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயரை அறிவிக்காமல், பீதெஸ் செய்தி நிறுவனத்தின் வழியாக இவ்வேண்டுகோளை அவைகள் முன்வைத்துள்ளன.

கனரக ஆயுத மோதல்கள் நிறுத்தப்படும்போது, எதிரணி இனக்குழுவுக்கு எதிராகப் படுகொலைகள் தொடங்கும் எனவும், இதை, தென் சூடான் உள்நாட்டுப் போரின்போது பல நகரங்களில், பலமுறைகள் தாங்கள் பார்த்திருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. 

இதற்கிடையே, தென் சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் 300 இந்தியா்கள் சிக்கித் தவித்து வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் தென் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்காக, இந்திய துாதரகம், வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி, அவர்களை இணைத்துள்ளது.

தென் சூடானில் அதிபர் சல்வா கீர், துணை அதிபர் ரியக் மாசர் ஆகியோருக்கும் இடையேயான அதிகாரப் போட்டி காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். பின் நீண்ட நாள் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி முதல் அந்நாட்டு தலைநகர் ஜுபாவில் மீண்டும் இரு தரப்பு இராணுவ வீரர்களுக்கிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதில் 150 இராணுவ வீரர்கள் பலியாகினர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.