2016-07-11 15:27:00

இது இரக்கத்தின் காலம் : வாழ்வின் உண்மையான அர்த்தம்


அவன் ஒரு பணக்கார இளைஞன். தனது பணியாளர்களை அடித்து அவமதித்தான். அவர்களைக் கசக்கிப் பிழிந்தான். தான் பணம் கேட்கும்போதெல்லாம் கொடுக்க கடமைப்பட்டவர்கள் என்ற உரிமையில், தனது பெற்றோர் மனதைக் காயப்படுத்தினான். அழகான எந்தப் பெண்ணும் தனக்கு உரியவர் என்று அனுபவித்தான். இப்படி எல்லாரும், எல்லாப்பொருளும் தனக்காகவே என்பதே அவன் எண்ணம். இப்படிப்பட்ட வாழ்க்கை முப்பது வயதுக்குள் கசந்துவிட்டது. வாழ்வுமீது அவனுக்கு ஒரு வெறுப்பு. எனவே அமைதி தேடி அங்குமிங்கும் அலைந்தான். கடைசியாக ஒரு துறவியிடம் சென்றான். தனது துன்பத்தைச் சொல்லி அழுதான். அவனது கதையைக் கேட்டு அவனைத் தட்டிக்கொடுத்த துறவி, உனக்கு ஏதாவது கலைகள் தெரிந்தால் சொல் என்றார். செஸ் மிக நன்றாக விளையாடுவேன் என்றான் இளைஞன். துறவியும் மகிழ்வுடன், தனது சீடர்களில் மிகவும் பக்குவமான ஒருவரை அழைத்து அவனோடு செஸ் விளையாடச் சொன்னார். அந்தச் சீடருக்கு செஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனாலும், தனது குருவின் சொல்லுக்குப் பணிந்து விளையாடத் தொடங்கினார். அப்போது அவ்விருவருக்கும் மத்தியில் ஒரு கூரிய வாளை வைத்தார் துறவி. ஆட்டத்தில் யார் தோற்கின்றீர்களோ அவர் வெட்டப்படுவார் என்று அறிவித்தார் துறவி. சீடரின் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. ஆனால் இளைஞன் பயந்துகொண்டு கவனமாக விளையாடத் தொடங்கினான். சீடருக்கு செஸ் விளையாடத் தெரியாது என்பது ஆரம்பத்தில் அவனுக்குத் தெரியாது. ஆனால் நேரம் ஆக ஆக அவனுக்குப் புரிந்துவிட்டது. சீடரின் காய்களை எளிதாக வெட்டித் தள்ளினான். தான் சாவிலிருந்து தப்பிவிட்டோம் என மகிழ்வோடு விளையாடினான் இளைஞன். ஆனால் சீடரோ, தோல்வி, சாவு இதில் எதைப் பற்றியுமே கவலைப்படாமல் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார். இளைஞனுக்கு வியப்பு. மனதில் ஒரு முடிவுக்கு வந்தான் இளைஞன். இந்த நல்லவர் சாகக் கூடாது, நான் செத்தால் பரவாயில்லை என்று நினைத்து, தாறுமாறாக ஆடத்தொடங்கினான். சீடர் வெற்றியடையட்டும் என்று, வேண்டுமென்றே தன் காய்களைப் பலிகொடுத்தான் இளைஞன். அப்போது துறவி பளிச்சென்று எழுந்து, செஸ் பலகையைக் கவிழ்த்துப் போட்டார். பின்னர் சொன்னார்-நீங்கள் இருவருமே தோற்கவில்லை என்று. பின்னர் இளைஞனைப் பார்த்து, பிறருக்காக வாழ்வதுதான், வாழ்வின் உண்மையான அர்த்தம் என்பது உனக்குப் புரிந்துவிட்டது. ஆசிரமத்தில் சிறிது நாள்கள் தங்கிவிட்டுச் செல் என்றார் துறவி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.