2016-07-09 15:29:00

புண்பட்ட உலகில் குணப்படுத்துபவர்களாகச் செயல்படுங்கள்


ஜூலை,09,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இவ்வாரத்தில் நடந்துள்ள துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை வன்மையாய்க் கண்டித்துள்ள அதேவேளை, கிறிஸ்தவர்கள் குணப்படுத்தும் சக்திகளாகச் செயல்படுமாறு அந்நாட்டு ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காழ்ப்புணர்வு மற்றும் மனிதமற்ற செயல்கள் இடம்பெறும் சூழல்களில், கிறிஸ்தவர்கள் பரிவன்பை வெளிப்படுத்தி, குணமளிப்பவர்களாகச் செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Joseph Kurtz.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Minnesotaவிலும், Louisianaவிலும் இரு ஆப்ரிக்க அமெரிக்கர்கள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள், கண்டனப் பேரணிகளை நடத்தினர். இவ்வியாழனன்று டல்லஸ் நகரத்தில் நடந்த பேரணியின்போது மர்ம நபர்கள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில், ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். 

இத்தாக்குதல்களையடுத்து, இவ்வெள்ளியன்று தனது வலைப்பதிவில் (blog) எழுதியுள்ள டல்லஸ் ஆயர் Kevin Farrell அவர்கள், இதில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.

நாம் எல்லாரும் கடவுளின் குழந்தைகள் எனவும், ஒவ்வொரு மனித வாழ்வும் விலைமதிப்பற்றது எனவும், வன்முறையை, அமைதி வெற்றி கொள்ளும் எனவும் கூறியுள்ள டல்லஸ் ஆயர், உரையாடல் வழியாக, அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்கப்படுத்துமாறு கேட்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், அண்மைக் காலமாக, நிறவெறி மோதல்கள் அதிகமாக நடக்கின்றன. குறிப்பாக, ஆப்ரிக்க அமெரிக்கர்கள் கொல்லப்படுவது, நீண்டகாலப் பிரச்சனையாக இருந்து வருகிறது. மேலும், அந்நாட்டில், காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல்களில் ஒன்றாக, இந்த வார நிகழ்வு கருதப்படுகிறது. கடந்த, 2001ம் ஆண்டில், காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 72 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.