2016-07-09 14:48:00

பிளாரன்ஸின் முன்னாள் பேராயர் கர்தினால் Piovanelli மரணம்


ஜூலை,09,2016. இச்சனிக்கிழமை காலையில் காலமான, இத்தாலியின் பிளாரன்ஸ் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Silvano Piovanelli அவர்களின் மேய்ப்புப்பணிகளை நன்றியோடு நினைப்பதாக, தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிளாரன்ஸின் தற்போதைய பேராயர் கர்தினால் Giuseppe Betori அவர்களுக்கு அனுப்பியுள்ள இச்செய்தியில், கர்தினால் Piovanelli அவர்கள், நற்செய்திக்கு மிகுந்த மகிழ்வோடும், ஞானத்தோடும் பணியாற்றினார் மற்றும், திருஅவையை மிகவும் அன்பு கூர்ந்தார் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. கர்தினாலின் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும், அவரின் பிரிவால் வருந்தும் எல்லாருடனும் தான் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

92 வயது நிரம்பிய கர்தினால் Piovanelli அவர்கள், 1983ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை, பிளாரன்ஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றினார்.

கர்தினால் Piovanelli அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 212 ஆகவும், எண்பது வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 112 ஆகவும் மாறியுள்ளன. 

மேலும், கர்தினால் Piovanelli அவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள இத்தாலிய பிரதமர் மத்தேயோ ரென்சி அவர்கள், கர்தினால் Piovanelli அவர்கள், பிளாரன்ஸ் நகரின் வாழ்வுக்கும், விசுவாசத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.