2016-07-09 15:10:00

திருத்தந்தை : கனவு காண்பதற்கு துணிச்சல் கொள்ளுங்கள்


ஜூலை,09,2016. அர்ஜென்டீனா நாட்டினர் கனவு காண்பதற்கு துணிச்சல் கொள்ள வேண்டுமென்று, அந்நாட்டுச் செல்லமகன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

அர்ஜென்டீனா நாடு சுதந்திரம் பெற்றதன் இருநூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் José María Arancedo அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு கேட்டுள்ளார்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் மூதாதையர் எடுத்த பாதையில் நம்மை மேலும் உறுதியடையச் செய்வதற்கு, இக்கொண்டாட்டம் உதவும் என்ற தனது ஆவலையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

தனது தாயகத்தின் அதிகாரிகள் மற்றும் குடிமக்களுக்கென எழுதியுள்ள  இக்கடிதத்தில், நம் தாய்பூமியை விற்க வேண்டாம், மாறாக, எல்லா விதமான காலனி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்குமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயாளர், வறுமையில் வாழ்பவர், கைதிகள், தனிமையில் துன்புறுபவர், வேலையின்றி இருப்பவர், மனித வர்த்தகத்திற்குப் பலியாகுபவர், உரிமை மீறல்களால் துன்புறும் சிறார், போதைப்பொருளால் துன்புறும் இளையோர் போன்ற, அர்ஜென்டீனா சமுதாயத்தில் மிகவும் துன்புறுவோர் மீது அதிகக் கவனம் செலுத்தப்படுமாறும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

வயது முதிர்ந்தவர்களும், இளையோரும் நாட்டை முன்னோக்கி நடத்தும் பாதையை வடிவமைக்குமாறு கூறியுள்ள திருத்தந்தை, நாட்டின் வரலாறு பற்றிய நல்ல நினைவைக் கொண்டிருக்கும் வயது முதிர்ந்த மக்கள், புறக்கணிப்பு கலாச்சாரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, வருங்காலக் கனவுகளை முன்வைக்குமாறு கூறியுள்ளார்.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டீனா, 1816ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி, இஸ்பானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. இந்த 200ம் ஆண்டு நிறைவு விழா இச்சனிக்கிழமை நடைபெறுகிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.