2016-07-08 15:13:00

உலகிற்கு, இரக்கமும் பரிவன்பும் தேவைப்படுகின்றன


ஜூலை,08,2016. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் வருகிற வாரத்தில் தொடங்கவிருக்கும், நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பது பற்றிய மூன்றாவது கருத்தரங்கு, இரக்கத்தை மிக அதிகமாக அனுபவிக்க மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் மணிலா கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

இம்மாதம் 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை மணிலாவின் புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கின் முதல் நாளை, திருப்பலி நிறைவேற்றி ஆரம்பித்து வைக்கும் கர்தினால் தாக்லே அவர்கள், அந்நாளில் இடம்பெறும் அமர்வுகளையும் தலைமை தாங்கி நடத்துவார்.

இக்கருத்தரங்கை நடத்துபவர்க்கு, இவ்வியாழனன்று திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், நாம் இரக்கம் பற்றிப் பேசுகிறோம், அதனை அறிவிக்கிறோம், ஆனால், நம் இதயத்தில் இரக்கத்தைக் கொண்டிருக்கின்றோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

துருக்கி, பங்களாதேஷ், பாக்தாக் என, கடந்த வாரத்தில் மட்டும் உலகில் பல இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்று கவலை தெரிவித்த கர்தினால் தாக்லே அவர்கள், இந்த உலகத்திற்கு, இரக்கமும் பரிவன்பும் தேவைப்படுகின்றன என்று கூறினார்.  

ஆதாரம் : CBCP/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.