2016-07-07 15:21:00

பழங்குடி மக்களின் ஏக்கங்களுக்கு குரல்கொடுக்கும் திருத்தந்தை


ஜூலை,07,2016. பழங்குடி மக்களின் மிக ஆழந்த ஏக்கங்களுக்கு நான் குரல்கொடுக்க விழைகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காணொளிச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

இயேசு சபையினரால் நடத்தப்படும் செபத்தின் திருத்தூதுப் பணிக்குழு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஓர் அங்கமாக, திருத்தந்தையின் ஒவ்வொரு மாத செபக் கருத்துக்களை, காணொளிச் செய்தியாக வெளியிட்டு வருகிறது.

ஜூலை மாதத்திற்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செபக்கருத்து, பழங்குடி இனத்தைச் சார்ந்த மக்களை மையப்படுத்தி அமைந்துள்ளது.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் ஓர் அரங்கத்தின் மேடை நோக்கி நடந்து செல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ள ஒரு காட்சியுடன், இந்தக் காணொளித் தொகுப்பு ஆரம்பமாகிறது.

அவ்விளம்பெண், அரங்கத்தின் மேடையில், 'மைக்' முன் நின்று, "பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களுக்காக நான் பேசுகிறேன். எங்கள் வாழ்வு முறை, உரிமைகள், பாரம்பரியங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறேன்" என்று பேசுகிறார்.

"நீங்கள் எனக்குச் செவி மடுப்பீர்களா?" என்ற கேள்வியுடன் அவ்விளம்பெண் பேசி முடிக்கும்போது, 'காமிரா' அப்பெண்ணுக்குப் பின்புறமாகச் சென்று, யாருமே இல்லாத ஓர் அரங்கத்தைக் காட்டுகிறது.

அவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மேடையில் பொருத்தப்பட்டுள்ள ஒரு திரையில் தோன்றி பேசுகிறார்.

"பழங்குடி மக்களின் மிக ஆழ்ந்த ஏக்கங்களுக்கு நான் குரல் கொடுக்க விழைகிறேன். தங்கள் வாழ்வு, தனித்துவம் ஆகியவற்றை இழக்கும் ஆபத்தில் இருக்கும் பழங்குடி மக்களை மதிக்கும் அனைவரோடும் நானும் இணைகிறேன். அவர்கள் உள்ளத்திலிருந்து எழுப்பும் வேண்டுதலுடன் என் குரலையும் இணைக்க விரும்புகிறேன்" என்ற வார்த்தைகளுடன், இந்தக் காணொளிச் செய்தியை, திருத்தந்தை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.