2016-07-07 16:05:00

பணமும், வசதியும் கொடுப்பது மட்டும் போதாது - பங்களாதேஷ் ஆயர்


ஜூலை,07,2016. குழந்தைகளை தகுந்த வழிகளில் பாதுகாத்து வளர்க்காமல் இருப்பது, பெற்றோரின் தவறு என்று பங்களாதேஷ் ஆயர், Gervas Rozario அவர்கள், பீதெஸ் (Fides) செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

ஜூலை 1ம் தேதி, டாக்கா நகரில் நடைபெற்ற கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட இளையோர் அனைவரும் கல்வியும், செல்வமும் மிகுந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் ரொசாரியோ அவர்கள், குழந்தைகளுக்கு பணத்தையும், வசதியான வாழ்வையும் கொடுப்பதோடு பெற்றோரின் கடமை நின்றுவிடுவதில்லை என்று கூறினார்.

இளையோர் இன்று பல்வேறு தொடர்பு சாதனங்கள் வழியே பெறும் செய்திகள் அவர்கள் எண்ணங்களையும், உள்ளத்தையும் அடியோடு மாற்றும் சக்தி படைத்தவை என்பதை பெற்றோர் உணர்ந்து, இளையோருக்கு தகுந்த வழிகளைக் காட்டுவது முக்கிய கடமை என்று ஆயர் ரொசாரியோ அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, டாக்கா வன்முறைகளில் ஈடுபட்ட இளையோரில் ஒருவர், ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரின் மகன் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, Imtiaz Khan Babul என்ற அந்த அரசியல் தலைவர், தன் மகனை தான் சரியாக வளர்க்கத் தவறியதற்காக தொலைக் காட்சியில் மக்களிடம் மன்னிப்பு கேட்டார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.