2016-07-07 16:13:00

ஒலிம்பிக் காலத்தில் வறியோருக்கு உணவு வழங்கும் திட்டம்


ஜூலை,07,2016. பிரேசில் நாட்டின் ரியோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் வேளையில், அங்கு பரிமாறப்படும் உணவை வீணாக்காமல்,  வறியோருக்கு வழங்கும் ஒரு திட்டத்தை, ஐ.நா. அவையின், FAO எனப்படும் உணவு, வேளாண் துறை வெளியிடுகிறது.

கடந்த ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற பன்னாட்டு கண்காட்சி EXPOவின்போது மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சி வெற்றி அடைந்ததையடுத்து, இந்த முயற்சியை ஒலிம்பிக் விளையாட்டு காலத்திலும் தொடர FAO முடிவு செய்துள்ளது.

உலகில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பகுதி வீணாவதைத் தடுக்க, அந்த உணவை, வேறு வழிகளில் பாதுகாத்து, வறியோருக்கு வழங்கும் முயற்சியில், உணவு தயாரிப்பதில் உலகப் புகழ்பெற்ற சமையல் நிபுணர்கள் இணைந்துள்ளனர் என்று FAO அதிகாரிகள் கூறியுள்ளனர்.

"மிலான் EXPO 2015 முதல், ரியோ ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2016 முடிய" என்ற தலைப்பில், ஜூலை 8, இவ்வெள்ளியன்று, உரோம் நகரில் நடைபெறும் ஒரு கூட்டத்தில், உணவைப் பாதுகாத்து, வறியோருக்கு வழங்கும் திட்டம் வெளியிடப்படும் என்று FAO செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.