2016-07-07 15:56:00

அமைதிப் பாலம் கட்டும் அவசியமானப் பணி - கர்தினால் கிரேசியஸ்


ஜூலை,07,2016. ஆசிய நாடுகளில் வாழும் அனைத்து மதத் தலைவர்களும் அமைதிப் பாலங்களைக் கட்டும் அவசியமானப் பணியில் ஈடுபடவேண்டும் என்று, கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகளின் தலைவரும், மும்பை பேராயருமான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இரமதான் மாத நோன்பினை நிறைவேற்றியுள்ள இஸ்லாமிய சமுதாயத்திற்கு, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த வேளையில், இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற படுகொலையில் இறந்தோர், மற்றும் அவர்களது உறவினர்களை எண்ணி, ஆசியத் திருஅவை கண்ணீர் வடிக்கிறது என்று கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், வன்முறைகள் பெருகி வரும் இவ்வுலகில், இறைவனின் அளவற்ற இரக்கத்தில் நம்பிக்கை வைக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள், ஆசியாவில் அதிக அளவில் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அமைதியை விரும்பும் ஆசிய மக்கள், உறவுப் பாலங்களைக் கட்டுவதில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.