2016-07-06 16:28:00

வன்முறையைத் தடுக்க இஸ்லாமியர் இணையவேண்டும்


ஜூலை,06,2016. வன்முறையைத் தடுக்கவும், உண்மையான இஸ்லாமிய மத நம்பிக்கையை வளர்க்கவும் இஸ்லாமிய சகோதரர்கள் ஒருங்கிணைந்து வரவேண்டும் என்று ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, இரஃபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

இஸ்லாமிய சகோதரர்கள் இரமதான் மாத நோன்புகளை முடித்துள்ள வேளையில், அவர்களுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், இறைவனின் பெயரால் நடந்துவரும் படுகொலைகளை, அதிகாரப்பூர்வமாக கண்டனம் செய்வதற்கு, இஸ்லாமிய சமூகம் இணைந்து வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

பங்களாதேஷ், சவுதி அரேபியா, ஆகிய நாடுகளிலும், ஈராக்கின் பாக்தாத் நகரிலும் நடைபெற்ற படுகொலைகள், இரமதான் நோன்பு காலத்தில் நடைபெற்றதை சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், உண்மையான மத நம்பிக்கை கொண்ட அனைவரும் இத்தகைய வன்முறைகளை முழுமையாகக் கண்டனம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மனித உயிரையும், உரிமைகளையும் மதிக்கும் மத உணர்வுகளை மக்கள் நடுவே வளர்ப்பது, அனைத்து மதத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பணி என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்களின் செய்தி வலியுறுத்துகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.