2016-07-06 16:21:00

பிரான்ஸ் நாட்டு வறியோரை சந்தித்த திருத்தந்தை


ஜூலை,06,2016. பிரான்ஸ் நாட்டின் லியோன் பகுதியில் பணியாற்றிவரும் ATD Fourth World என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள், 200க்கும் அதிகமான வறியோரை அழைத்துக் கொண்டு, உரோம் நகரில் மேற்கொண்டுள்ள திருப்பயணத்தின் போது, இப்புதன் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தனர்.

Le Sappel என்றழைக்கப்படும் அருள் சகோதரிகளின் குழுமத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களின் உதவியோடு நடைபெற்ற இந்த திருப்பயணத்தில், லியோன் உயர் மறைமாவட்ட பேராயர், கர்தினால் Philippe Xavier Barbarin அவர்களும் கலந்துகொண்டார்.

வாழ்வின் மிக இக்கட்டான சூழல்களில் வாழும் வறியோருக்கு உதவி செய்யும் வகையில் ATD Fourth World என்ற அமைப்பை நிறுவிய அருள்பணி Joseph Wrensinski அவர்கள் பிறந்ததன் நூறாண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் இத்திருப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வமைப்பினால் பயன்பெறும் வறியோர், தங்கள் வாழ்வில் கண்ட துயரங்களையும், கிறிஸ்துவ நம்பிக்கையின் அடிப்படையில் அத்துயரங்களை தங்கள் மேற்கொண்ட வழிகளையும் சித்திரிக்கும் படங்கள் அடங்கிய நூல் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் வழங்கினர்.

ஜூலை 4ம் தேதி முதல் 8ம் தேதி முடிய நீடிக்கும் இத்திருப்பயணம், முதல் கிறிஸ்தவர்கள் உரோம் நகரில் சந்தித்த சவால்களை நினைவுகூரும் ஒரு பயணமாக அமையும் என்று இப்பயணத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.