2016-07-06 16:37:00

பங்களாதேஷுக்காக கண்ணீர் சிந்த விழைகிறேன் - ஜப்பான் ஆயர்


ஜூலை,06,2016. பங்களாதேஷ், டாக்கா நகரில் உயிரிழந்த 7 ஜப்பான் நாட்டவருக்கு மட்டுமல்ல, இத்தகைய வன்முறைகளில் உயிரிழக்கும் அனைத்து மக்களுக்காகவும் நான் கண்ணீர் சிந்த விழைகிறேன் என்று ஜப்பான் நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

டாக்கா உணவு விடுதியில் கொல்லப்பட்ட 20 பிணைக் கைதிகளில் 7 பேர் ஜப்பான் நாட்டவர் என்பதை அறிந்தபோது, உலகம் சந்தித்து வரும் வன்முறைப் பிரச்சனைகளில் தங்கள் நாடும் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தான் உணர்ந்ததாக நீகட்டா (Niigata) மறைமாவட்டத்தின் ஆயர் Tarcisio Isao Kikuchi அவர்கள் எழுதியுள்ள ஒரு மடல், ஆசிய செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட 7 பேரில் ஒருவர், 80 வயது நிறைந்த Hiroshi Tanaka என்ற கத்தோலிக்கர் என்றும், இவர், டோக்கியோ நகரின் பங்குத் தளங்களில் மறைக் கல்வி புகட்டும் ஆசிரியர் என்றும் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார், ஆயர் Kikuchi.

இவரைப் போலவே, கொல்லப்பட்ட ஜப்பானியர் அனைவருமே, பங்களாதேஷ் நாட்டில் மக்களின் மேம்பாட்டிற்கென உழைக்கச் சென்றவர்கள் என்பதையும் ஆயர் தன் மடலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இறந்துபோன ஜப்பானியருக்கு கண்ணீர் வடிக்கும் அதே வேளையில், வன்முறையில் சிக்கித் தவிக்கும் பங்களாதேஷ் நாட்டு மக்களுக்காகவும் கண்ணீர் சிந்துகிறேன் என்று ஆயர் Kikuchi அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.