2016-07-06 16:41:00

சொற்கள், துப்பாக்கிகளை விட அதிக தீமையானவை – ஆப்ரிக்க ஆயர்


ஜூலை,06,2016. நாம் பயன்படுத்தும் சொற்கள், பெரும் வன்முறையைத் தூண்டிவிடக் கூடும், பலவேளைகளில், நமது சொற்கள், துப்பாக்கிகளை விட அதிகத் தீமையை விளைவிக்கக் கூடியவை என்று, தெற்கு சூடான் நாட்டின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

தெற்கு சூடான் நாட்டில் பொறுப்பில் இருக்கும் பல உயர் அதிகாரிகளும், அவர்களின் தொண்டர்களும், வன்முறையைத் தூண்டும் வகையிலும், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலும் பேசி வருவதை, Tombura மறைமாவட்ட ஆயர், எட்வர்ட் ஹிபோரோ (Edward Hiboro) அவர்கள் கண்டனம் செய்துள்ளார்.

தென் சூடான் நாட்டில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மக்களின் ஒற்றுமை ஒரு முக்கிய கருவியாக அமையவேண்டும் என்றும், இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் அரசு அதிகாரிகளும், மக்களும் நடந்துகொள்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமையும் என்றும் ஆயர் ஹிபோரோ அவர்கள் கூறினார்.

அமைதியையும் உரையாடலையும் வளர்க்கும் சொற்களைப் பயன்படுத்துவதை விடுத்து, வெறுப்பை வளர்க்கும் சொற்களை பயன்படுத்துவது, நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று ஆயர் ஹிபோரோ அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆதாரம் : Sudan Tribune / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.