2016-07-06 15:03:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 6


ஜூலை,06,2016. 1949ம் ஆண்டு டிசம்பர் 21ம் நாள். அன்னை தெரேசா அவர்கள், லொரேத்தோ சபையிலிருந்து விலகி, புதிய சபை ஆரம்பிக்கும் நோக்கத்தில், கொல்கத்தாவின் பிரபலமான மோத்தஜில் சேரியில் வாழத் தொடங்கிய நாள் அது. மிகச் சாதாரண தொடக்கம் அது. விளம்பரங்கள், வெற்றி தோல்விகள், இவைகளில் அக்கறைப்படாமல், ஏழைகளிலும் ஏழைகளுக்குச் சேவை செய்வதையே தனது ஒரே நோக்கமாகக்  கொண்டிருந்தார் அன்னை. அன்னையின் இதயமும் மனமும் அன்பு வேண்டி, உறவு தேடி நின்ற மக்கள் மீதே இருந்தன. பள்ளி செல்ல வாய்ப்பில்லாத அந்தச் சேரிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தார். தரையை கரும்பலகையாக்கினார். வீடு வீடாகவும், தெருத் தெருவாகவும் சென்று, ஏழை சேரிக் குழந்தைகளுக்கு, துணிமணிகளையும் உணவுப்பொருள்களையும் வாங்கி வந்து கொடுத்தார். எதுவும் கிடைக்காதபோது, தனது உணவை அக்குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு பட்டினி கிடந்தார். விருந்துகளிலும், திருவிழாக்களிலும் கலந்துகொள்ளும்போதும் சரி, எங்கேயாவது, இரயிலிலோ, பேருந்திலோ பயணம் செய்யும்போதும் சரி, தன் அருகில் இருந்தவர்களிடம்.... “நீங்கள் சாப்பிடும்போது இந்த ஏழைகளையும் நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வேண்டாம் எனத் தூக்கி எறியும் எப்படிப்பட்ட உணவையும் இவர்களுக்குக் கொடுங்கள். ஏழைகளுக்குச் சுமந்து சென்று கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று சொல்வார்.

அன்னை எப்போது வெளியே சென்றாலும், இப்படி ஏதாவது பொருள்களை கைநிறையப் பெற்றுக்கொண்டு வருவார். சந்தைக்குச் சென்று திரும்பும் தாயை எதிர்நோக்கிக் குழந்தைகள் இருப்பதைப் போன்று, சேரிக் குழந்தைகள் அன்னையின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆடம்பரமான என்டேலி பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவி வகித்தபோது கிடைக்காத மன அமைதியையும் ஆனந்தத்தையும் சேரியில் அனுபவித்தார்கள் அன்னை தெரேசா. மோத்தஜில் சேரியில் அன்னையின் பணி நாளுக்கு நாள் விரிவடைந்தது. பல சகோதரிகள் அன்னையோடு சேர்ந்து பணியாற்ற முன்வந்தார்கள். அன்னைக்கு இது கொஞ்சம் வலிமை கொடுத்தது. சேரியில் மக்களின் வாழ்வும் சிறிது சிறிதாக மெருகூட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் சேரிப் பெண்களைக் கூட்டி, உடல் தூய்மை, வீட்டுச் சுத்தம், சுற்றுப்புற தூய்மை, நலமான வாழ்வு இவற்றின் அவசியத்தை எடுத்துச் சொன்னார். நன்னடத்தை இல்லாத கணவர்களை வெறுப்பதோ, அவர்களுடன் சண்டை போடுவதோ சரியான தீர்வாக இருக்காது. மாறாக, அன்னைபக் கொடுத்து, அன்பைப் பெறுவதுதான் சரியான பாதை என்பதை, பெண்களிடம் புரிய வைத்தார். சேரியையும், வீட்டையும், தங்கள் குழந்தைகளையும் எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது பற்றி, அன்னையும், அவரோடு சேர்ந்த சகோதரிகளும் பெண்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். இப்படியாக சேரியில் இரண்டு மாதங்கள் வாழ்ந்தார் அன்னை தெரேசா. தன்னுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு சகோதரிகள் சேர்ந்ததால், அன்னைக்கு ஒரு வீடு தேவைப்பட்டது. வீடு தேடிய படலம் பற்றி அன்னை இப்படி தனது குறிப்பேட்டில் எழுதி வைத்திருக்கறார்....

“கால் வலிக்க நடந்தேன். சாதாரண உணவுக்கும், எளிமையான குடியிருப்புக்கும் ஏழை மக்கள் தேடி அலையும்போது, அவர்கள் எவ்வளவு வேதனையும், விரக்தியும் அடைவார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்துகொண்டேன். சொகுசு மிகுந்த லொரேத்தோ வாழ்க்கை, என் கண்முன் நிழலாடி என்னைப் பலவீனப்படுத்துகிறது. கடவுளே, எனக்கு நெஞ்சுரத்தைக் கொடு. எனக்குத் தங்குவதற்கு இடம் வேண்டும். முதல் பிரச்சனை உருவாகி விட்டது. அருள்பணி வேன் அவர்களுக்குத் தெரிந்த திரு.மைக்கிள் கோமஸ் அவர்கள் குடும்பம், கிரீக் தெரு,14ல் இருந்தது. அவர்களிடம் ஒரு பகுதியை ஒதுக்கித்தர வேண்டுமென்று கேட்டபோது, திரு.கோமஸ் அவர்கள் மலர்ந்த முகத்துடன் ஒத்துக்கொண்டார்...”என்று எழுதி வைத்திருக்கிறார்.

மக்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக இது அன்னைக்குத் தெரிந்தது. அன்னையும், சகோதரிகளும் அந்த வீட்டிற்கு குடி வந்துவிட்டார்கள். சிறிய அறை. ஆயினும் அந்த இடம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. மரத்தாலான மாடிப்படிகளில் ஏறியே அந்த அறைக்குச் செல்ல வேண்டும். அவர்கள் பயன்பாட்டிற்கு ஒரேயொரு மேஜையும், நாற்காலியும்தான் இருந்தன. இந்த வீட்டிற்கு அன்னை வந்தது பற்றிச் சொல்லியுள்ள திரு. கோமஸ் அவர்கள்,

“மதர், இவை போதுமா? என்று அருள்பணி வேன் கேட்டார்கள். வசதியுடன் வாழ்வதற்காக நான் இங்கு வரவில்லையே என்று அன்னை சட்டெனப் பதில் சொன்னார். நாள் முழுவதும் சேரிகளில் அலைந்து ஓய்ந்துபோய் விடுவார்கள். அப்படியிருந்தும், இரவு எவ்வளவு நேரமானாலும், படுப்பதற்குமுன், மரத்தாலான மாடிப்படிகள் அத்தனையையும் அன்னை தண்ணீரால் சுத்தம் செய்வார்கள். புனிதமான அர்ச்சிக்கப்பட்ட ரோஜா மலர்களைப் பார்ப்பதுபோல் அந்தப் படிகளை எங்கள் குடும்பத்தினர் பார்த்தோம். அன்னை மிகவும் எளிமையான, தூய்மையான பெண். கடவுளிடம் முழு நம்பிக்கையுடையவர்கள், தொடக்கத்திலிருந்தே அவர்களிடம் எந்தவிதப் போலித்தனமும் கிடையாது. நாங்கள் ஏதாவது உதவி அனுப்பினால், ஒப்புக்காக மறுப்பது போன்ற அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் இல்லாமல் நன்றியுடன் பெற்றுக் கொள்வார்கள். சில நேரங்களில் அன்னை மிகவும் துன்பம் அனுபவித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் எனக்கு ஒரு குறிப்பு வரும். கோமஸ், கைவசம் அரசியில்லை. இரண்டு அல்லது மூன்று படி அரிசி உங்களால் கொடுத்து உதவ முடியுமா? கடனாகவே தாருங்கள். நான் திருப்பித் தந்து விடுகிறேன் என எழுதியிருப்பார்கள். அதைப் பார்த்தவுடன் நான் அழுதே விடுவேன். உன்னை உறுத்தும்வரை கொடு என்பது அன்னையின் தாரக மந்திரம். பட்டறிவில் இந்த ஞானம் பிறக்க வேண்டும் என்பதற்காக இப்படி தன்னையே சூன்யமாக்கிக்கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை. ஏழ்மை எனும் சூட்டுக்கோல் வைக்கும் தழும்புகள் நிரந்தரமாகி, எப்பொழுதும் தன் இலட்சியத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக அன்னை இப்படி நடந்துகொண்டார்களா, தெரியவில்லை. வறியோரிலும், வறியோர்க்குத் தொண்டுபுரிவது என்பது, அன்னையின் இலட்சியமாக இருந்தாலும், இப்படித்தான் அதைச் செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதலே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. தனியாக நின்ற காலத்திலும் சரி, மிகப் பெரிய சபையின் தலைவராக இருந்த காலத்திலும் சரி, தேவைக்கேற்ப தன் இலட்சியத்தைச் செயல்படுத்தினார்கள் அன்னை”

இவ்வாறெல்லாம் அன்னை தெரேசா பற்றிப் பகிர்ந்து கொண்டார் திருவாளர் கோமஸ். அன்னையின் பணிகளைப் பார்த்து, அவரிடம் படித்த மாணவிகள் அவருடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்கள். சகோதரிகளின் எண்ணிக்கை பெருகியது. அதனால் அன்னை தனது புதிய சபைக்கு, Missionaries of Charity அதாவது பிறரன்பு மறைத்தூதர்கள் எனப் பெயரிட்டார். சட்ட ஒழுங்குமுறைகளை அவரே எழுதினார். இதை வாசித்த அருள்பணி வேன் அவர்கள், இந்தக் கண்டிப்பான சட்ட விதிமுறைகள், இக்காலத்திற்கு ஒத்து வருமா என்று கேட்டார். ஆனால் அன்னை தனது எழுத்தில் உறுதியாக இருந்தார். அதை மாற்றவில்லை. 1950ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அந்த ஒழுங்குகள் தலத்திருஅவையின் அங்கீகாரம் பெற்றன. அன்னையின் சபையில் பல இளம்பெண்கள் சேரத் தொடங்கியதால் திரு.கோமஸ் அவர்கள் வீட்டின் மேல்தளம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. ஆதலால் அன்னை, அங்கிருந்து சர்குலர் தெருவில், பெர்சிய வர்த்தகருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் குடியேறினார்கள். அன்பையும், ஆத்மார்த்த பணியையும் மூலதனமாக்கிக் கொண்ட அன்னைக்குப் பல இடங்களிலிருந்து ஆதரவு கிடைக்கத் தொடங்கியது. இலட்சியங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் அன்னை தெரேசா. இந்த அன்னையில், இயேசுவின் இரக்கத்தைக் கண்டார்கள் மக்கள். இதனால் அன்னையை இறைஇரக்கத்தின் தூதராகவே மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். இன்றும் மக்கள் இறைஇரக்கத்தின் தூதராகவே அவரைப் பார்க்கிறார்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.