2016-07-05 16:34:00

வியாழனின் சுற்று வட்டப்பாதையில் நாசாவின் ஜூனோ


ஜூலை,05,2016. நாசா அறிவியலாளர்கள் அனுப்பிய ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக வியாழன் கோளின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்துள்ளது.

இது, சூரியக் குடும்பம், கோள்கள் உருவான விதம் உள்ளிட்டவை குறித்து ஆராய்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

வியாழன் கோளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா அறிவியலாளர்கள் 11 இலட்சம் டாலர் செலவிட்டு ஜூனோ விண்கலத்தைத் தயாரித்தனர். இந்த விண்கலம் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் விண்வெளி மையத்தில் இருந்து 2011, ஆகஸ்ட் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 5 ஆண்டுகளாகப் பயணித்து 290 கோடி கி.மீ. தூரத்தைக் கடந்த இந்த விண்கலம் அண்மையில் வியாழன் கோளின் காந்தப்புலத்தில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, வியாழன் கோளின் சுற்று வட்டப்பாதையில் ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக நுழைந்துள்ளது.

வியாழன் கிரகத்தின் வளையங்களிலுள்ள கதிரியக்கத் தன்மை குறித்து ஆராயவும், வியாழன் கோள் எப்படி உருவானது, ஒட்டுமொத்த சூரியக் குடும்பமும் எப்படி இயங்குகிறது என்பது குறித்து ஜீனோ தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் என்று நாசா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆதாரம் : பிபிசி/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.