2016-07-05 16:19:00

புனித பிரான்சிஸ் கட்டிய Porziuncolaல் ஆகஸ்ட் 4ல் திருத்தந்தை


ஜூலை,05,2016. “அன்புக்குரிய சிரியாவில் அமைதி இயலக்கூடியதே என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் ஒன்றிணைவோமாக, சிரியாவில் அமைதி” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டன

மேலும், இத்திங்கள் பிற்பகலில். “கோடை காலம், பலருக்கு ஓய்வெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது, அதேநேரம், நம் மனித உறவுகள் மீது அக்கறை செலுத்துவதற்கும் சாதகமான காலமாகவும் அமைந்துள்ளது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் வெளியிடப்பட்டன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி, இத்தாலியின் அசிசிக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, “அசிசியின் மன்னிப்பு” என்ற நிகழ்வின் எட்டாம் நூற்றாண்டு நிறைவு நிகழ்வை Porziuncolaல் அதிகாரப்பூர்வமாக நிகழ்த்துவார் என பிரான்சிஸ்கன் சபையினர் அறிவித்துள்ளனர்.

திருத்தந்தையின் இத்திருப்பயணம் குறித்து இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட அசிசி ஆயர் Domenico Sorrentino அவர்கள், வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி பிற்பகலில், தூதர்களின் புனித மரியா பசிலிக்காவிலுள்ள Porziuncola சிற்றாலயத்தில் திருத்தந்தை, இந்த வரலாற்று நிகழ்வை நிகழ்த்துவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

13ம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ் அசிசியார், பிரான்சிஸ்கன் சபையை ஆரம்பித்த இடம் மற்றும் அப்புனிதர் எழுப்பிய இச்சிறிய ஆலயத்திற்குத் திருத்தந்தை மேற்கொள்ளும் இத்திருப்பயணம், தனிப்பட்ட பயணமாக அமையும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

1216ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று, இந்த சிறிய ஆலயத்திற்குள் புனித பிரான்சிஸ் அசிசியார் செபித்துக்கொண்டிருந்தபோது, ஏராளமான வானதூதர்கள் புடைசூழ, கிறிஸ்துவையும், அன்னை மரியாவையும் காட்சியில் கண்டார். அப்போது புனிதர் தரையில் நெடுஞ்சாண்கிடையில் விழுந்தார். ஆண்டவர், அசிசியாரிடம், ஆன்மாக்களின் மீட்புக்காக என்ன வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அசிசியார், இந்த ஆலயத்தைத் தரிசிக்கும் அனைத்து திருப்பயணிகளின் அற்பப் பாவங்களை மன்னிக்கும் பரிபூரண பலனை நல்குமாறு கேட்டார். ஆண்டவரும், அச்சமயத்தில், திருத்தந்தையாகப் பணியாற்றிய திருத்தந்தை 3ம் ஒனோரியுஸ் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற்றால், இந்த மன்னிப்பை வழங்குவதாக ஒரு நிபந்தனை விதித்தார். அடுத்த நாள் புனிதர் திருத்தந்தையைச் சந்தித்தார், இந்த அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த நாளிலிலிருந்து, “அசிசியின் மன்னிப்பு” விழா, ஆகஸ்ட் முதல் தேதிக்கும், அடுத்த நாள் சூரியன் மறையும் வரைக்கும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், திருத்தந்தை அச்சி சென்று Porziuncolaல் செபிப்பது, “அசிசி மன்னிப்பின்” 800வது ஆண்டு நிறைவின் முக்கியத்துவத்தைக் குறிப்பதாய் அமைகிறது என்று, பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.