2016-07-04 14:51:00

கப்பல் தொழிலாளர்கள் தியாக வாழ்வு குறித்து திருப்பீட அவை


நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கப்பல் தொழிலாளர்களின் பங்களிப்பு எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, திரு அவையின், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியேற்றதாரர் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள அவை.

இம்மாதம் பத்தாம் தேதி சிறப்பிக்கப்படும் கடல் ஞாயிறு குறித்து சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள இத்திருப்பீட அவை, நம்மை சுற்றி நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பொருளிலும் கப்பல் தொழிலாளர்களின் உழைப்பு உள்ளது, ஏனெனில், இவர்களே, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரிய அளவில் மரச்சாமான்களையும், உணவுப் பொருட்களையும், வாகனங்கள் ஓட்டுவதற்கான எரிபொருள் எண்ணையையும் கடல் வழியாக எடுத்துச்செல்ல உதவுகின்றனர் என்ற வகையில் நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுகின்றனர் என அதில் கூறியுள்ளது.

கப்பல்களில் பணிபுரிவோர் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பொருட்களை கொண்டுசெல்வது மட்டுமல்ல, அண்மைக் காலங்களில் கடலில் தத்தளித்த எண்ணற்ற குடியேற்றதாரர்களையும் காப்பாற்றியுள்ளனர் எனவும் கூறுகிறது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியேற்றதாரர் பணி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ, மற்றும், செயலர், பேராயர் ஜோசப் களத்திப்பரம்பில் கையெழுத்திட்டுள்ள அறிக்கை.

இன்றைய உலகில் வியாபாரப் பொருள்களை ஏற்றிச் செல்லும் ஏறத்தாழ 50,000 கப்பல்களில் ஏறக்குறைய 12 இலட்சம் பேர் பணிபுரிவதாகக் கூறும் இத்திருப்பீட அவை, இவர்கள், கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்தும், இயற்கை சீற்றங்களில் இருந்தும் மட்டுமல்ல, விடுமுறையற்ற தொடர் பயணத்தினாலும், குடும்பங்களைப் பிரிந்திருப்பதாலும் பல்வேறு பிரச்னைகளை எதிர் நோக்குகின்றார்கள் என தெரிவிக்கிறது.

ஒவ்வொரு கப்பல் தொழிலாளியின் குழந்தையும், தந்தையின் நேரடிப் பராமரிப்பின்றி வளர்வது குறித்து கவலையையும் வெளியிடும் இத்திருப்பீட அவை, இப்பணியாளர்களின் மனித மற்றும் தொழில் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளது.

தனியார்களும் அரசுகளும், தலத்திருஅவை அதிகாரிகளும், கப்பல் தொழிலாளர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வில், அவர்களின் நலனுக்காக பணியாற்றவேண்டிய பொறுப்புணர்வும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியேற்றதாரர் பணி திருப்பீட அவையின் கடல் ஞாயிறுக்கான அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.