2016-07-04 13:06:00

இது இரக்கத்தின் காலம் : எது பெருமை?


அந்த இளைஞருக்கு ஒளிவு மறைவில்லாத குணம். ஆனால் உணர்ச்சிவயப்பட்டு அவசரத்தில் எதையும் செய்து விடுவார். சட்டெனக் கோபம் வரும். ஒருநாள் சுவாமி அரவிந்தர், அந்த இளைஞரைப் பார்த்து, தம்பி, உங்களுக்கு அறிவு அதிகம். அதில் சந்தேகமே இல்லை, உங்களால் எல்லாம் முடியும், அவ்வளவுக்கு வலிமை இருக்கிறது, உங்களைப் போன்று திறமையானவராக உள்ள பையனுக்குக் கடினமான செயல் எது? அடிக்கு அடி கொடுப்பதா? அல்லது உங்களை ஒருவர் அவமதித்துவிட்டால், அவர் முகத்தில் உடனே ஒரு குத்து விடுவதா? அல்லது அந்த நேரத்தில் உங்கள் கையை மடக்கி, கெட்டியாக மூடிக்கொண்டு கால்சட்டைப் பைக்குள்ளே வைத்துக்கொள்வதா? என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர், என்னைப் பொருத்தவரைக்கும் கையை மடக்கிக்கொண்டு சும்மா இருக்கிறது ரொம்பக் கஷ்டம் என்றார். சரிப்பா, உங்களை மாதிரி வீரமுள்ள பையனுக்கு எது பெருமை? எளிதான செயலைச் செய்வதா? அல்லது கடினமானதைச் செய்வதா? என்று மீண்டும் கேட்டார் அரவிந்தர். சற்று சிந்தித்த இளைஞர், கடினமான செயலைச் செய்வதுதான் என்று சொன்னார். நல்லது. இன்னொரு வாய்ப்பு வரும்போது நீ அப்படியே நடந்துகொள் என்று சொல்லிச் சென்றார் அரவிந்தர். சிறிது நாள்கள் கழித்து அந்த இளைஞர் அரவிந்தரைத் தேடி வந்தார். இளைஞரில் ஒரு பெருமிதம் தெரிந்தது. ஐயா, என்கூட வேலை செய்யும் ஓர் இளைஞர் மிகவும் முன்கோபக்காரர். அவர் ஒருநாள் கோபத்தில் என்னை அடித்துவிட்டார். உடனே நான் திருப்பி அடித்துவிடுவேன் என அவர் எதிர்பார்த்தார். அதற்குத் தகுந்தாற்போல் எச்சரிக்கையாகவும் இருந்தார். அந்த நேரத்தில் எனக்கு நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. அது, நான் நினைத்ததைவிட கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும் என் கையை மடக்கி என் சட்டப்பைக்குள் வைத்துக்கொண்டேன். அப்படிச் செய்ததும் எனது கோபம் மறைந்துவிட்டது. அந்த இளைஞர்மீது நான் கோபப்படவில்லை, ஆனால் அவருக்காக வருத்தப்பட்டேன். சிறிது நாள்கள் சென்று அவரைக் கைகுலுக்குவதற்காக கை நீட்டினேன். மிகுந்த வியப்போடு அப்படியே அவர் என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார் என்றார்.      

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.