2016-07-04 14:44:00

அர்ஜென்டீனா நாளிதழுக்கு திருத்தந்தை வழங்கிய பேட்டி


ஜூலை,04,2016. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வயது அவரது நடவடிக்கைகளைப் பாதித்திருந்தாலும், அவரின் அறிவும், மனமும், நினைவும் குறையாமல், நிறைவாக உள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அர்ஜென்டீனா நாட்டு La Nación நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் குறித்து தெரிவித்த கருத்தில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், புரட்சிகரமானவர் மற்றும் அவரின் தாராள குணம் ஒப்பிடப்பட முடியாதது என்றும், அவரின் தலைமைப்பணி விலகலுக்கும், அவரின் சொந்த விவகாரங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ள  திருத்தந்தை, இது அவரின் தலைமைப்பணியின் கடைசிச் செயல் என்றும் தெரிவித்தார்.

மேலும், வத்திக்கானில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்ப்பவர்கள் அவர்கள் வேலையைச் செய்கின்றார்கள், நான் எனது வேலையைச் செய்கின்றேன் என்றும் பேட்டியில் கூறினார்.

திறந்தமனம் கொண்ட, புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் காயமடைந்த குடும்பங்களுடன் தோழமையுணர்வு காட்டும் ஒரு திருஅவையை, தான் விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள், எல்லாவற்றுக்கும் மறுப்பு தெரிவிக்கிறார்கள், ஆனால், நான் எனது வழியில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் எனவும், மோதல்களைத் தான் புறக்கணிப்பதாகவும் தெரிவித்தார்.

அர்ஜென்டீனா நாட்டு அரசுத்தலைவர் Mauricio Macri அவர்களுடன் உள்ள உறவு பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு அவரோடு எந்தப் பிரச்சனையும் கிடையாது, அவர் நல்ல குடும்ப மனிதராகவும், சிறந்த மனிதராகவும் எனக்குத் தெரிகிறார் என்றும் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், La Nación நாளிதழுக்கு அளித்த இந்த நேர்காணல், இஞ்ஞாயிறன்று வெளியிடப்பட்டது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.