2016-07-02 15:09:00

குடும்பத்தில் அனுபவிக்கப்படும் உண்மையான மகிழ்ச்சி, இயல்பானது


ஜூலை,02,2016. “குடும்பத்தில் அனுபவிக்கப்படும் உண்மையான மகிழ்ச்சி, ஏதோ தற்செயலாகவும், எதிர்பாராதவிதமாகவும் அமைவது அல்ல, ஆனால் அது, இயல்பானது மற்றும் தொடர்ந்து நடப்பதாகும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டன.

மேலும், தூர்ஸ் நகர் புனித மார்ட்டின் பிறந்ததன் 1,700ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்கு, பிராக் பேராயர் கர்தினால் Dominik Duka அவர்களை, தனது சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளார் திருத்தந்தை.

ஹங்கேரி நாட்டின் Szombathely நகரில், இம்மாதம் 9ம் தேதி நடைபெறும் இவ்விழாத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவதற்கு, செக் குடியரசின் கர்தினால் Duka அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஹங்கேரி நாட்டின் முன்னாள் சபேரியாவான இந்நாள் Szombathely நகரில் பிறந்த புனித மார்ட்டின், தனது குழந்தைப் பருவத்தை, இத்தாலியின் பவியாவில் செலவிட்டார். பின்னர் தனது வாழ்நாளை பிரான்ஸ் நாட்டில் செலவிட்ட இவர், பிரான்சின் தூர்ஸ் நகர் ஆயராகப் பணியாற்றினார். ஐரோப்பா முழுவதும் ஓர் ஆன்மீகப் பாலமாக நோக்கப்படும் இப்புனிதரின் திருத்தலம் பிரான்சில் மிகவும் புகழ்பெற்றது. இஸ்பெயின் நாட்டின் Santiago de Compostela திருத்தலம் செல்பவர்கள், தூர்ஸ் நகரில் புனித மார்ட்டின் திருத்தலம் செல்கின்றனர். தூர்ஸ் நகர் புனித மார்ட்டின், கி.பி. 397ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இறைவனடி எய்தினார். இப்புனிதர், கிறிஸ்தவத்தைத் தழுவுவதற்கு முன்னர், ஒருநாள், கடுங்குளிர் காலத்தில், ஏமியன்ஸ் நகரின் நுழைவாயிலில், குளிரினால் நடுங்கி, அரை நிர்வாணமாகப் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஏழை ஒருவரைச் சந்தித்தார். அப்போது தனது போர்வையை இரண்டாகக் கிழித்து, ஒரு பகுதியை அந்த ஏழையின்மீது போர்த்தினார். அதேநாள் இரவு இயேசு மார்ட்டினுக்குக் கனவில் தோன்றி, இந்தப் போர்வையால் என்னைப் போர்த்தினாய் என்றார். இதுவே இப்புனிதர் கிறிஸ்தவத்தைத் தழுவக் காரணமாக அமைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.