2016-07-02 15:02:00

ஐரோப்பியக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி


ஜூலை,02,2016. ஐரோப்பா முழுவதும், மக்களின் ஒரு குடும்பமாக வாழ விரும்பினால், அக்கண்டம், மனிதரை மையமாக வைத்து செயல்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் மியூனிக் நகரில் இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள, “ஐரோப்பாவுக்காக ஒன்றிணைந்து” என்ற கூட்டத்திற்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், ஐரோப்பா, திறந்த மற்றும் வரவேற்கும் பண்பைக் கொண்டதாய்ச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

பொருளாதாரத்தில் மட்டுமல்ல, சமூக மற்றும் கலாச்சாரத்திலும், ஒன்றிணைந்து உழைக்கும் வழிகளைத் தொடர்ந்து உருவாக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை,  ஐரோப்பாவுக்காக ஒன்றிணைவது, எக்காலத்தையும்விட இக்காலத்திற்கு அதிகம் தேவைப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.

கடவுள் எப்போதும் வியப்புகளையும், புதினங்களையும் நிகழ்த்துபவர் என்றும், ஐரோப்பியர்கள், இவற்றைத் தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தி, நற்செய்தியின் கனிகளைக் கொணரவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, ஐரோப்பாவுக்கு, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஊட்டமளித்துள்ள கிறிஸ்தவ மூலங்களின் கனிகளை மேலும் அதிகரிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சந்திப்பு, ஒப்புரவு, வருங்காலம் என்ற தலைப்பில், ஐரோப்பாவின் பல்வேறு இயக்கங்களும், குழுக்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றன.

இக்காலப் பிரச்சனைகளை உண்மையான ஐரோப்பிய உணர்வுடன் எதிர்கொள்ளுமாறும்  கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்தில் சில காணக்கூடிய சுவர்களைத் தவிர, அச்சம், பல்வேறு சூழல் அல்லது மதத்தவரைப் புரிந்துகொள்ளத் தவறுதல், பகைமை போன்ற மனிதரின் இதயங்களில் கட்டப்பட்டுள்ள காணக்கூடாத சுவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.