2016-07-01 15:44:00

திருத்தந்தை, உரோம் மாநகரின் புதிய மேயர் சந்திப்பு


ஜூலை,01,2016. உரோம் மாநகரின் புதிய மேயர் Virginia Raggi அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார்.

உரோம் நகரின் முதல் பெண் மேயர் Virginia Raggi அவர்கள், உரோம் மறைமாவட்ட ஆயரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, உரோம் புறநகர்ப் பகுதியில் கடும் துன்பநிலையில் வாழும் மக்களின் விண்ணப்பங்கள், செய்திகள் மற்றும் சான்று வாழ்வு குறித்த காணொளிப் பதிவு ஒன்றை வழங்கினார்.

இச்சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய Raggi அவர்கள், திருத்தந்தை மிகவும் மனிதமிக்கவராக இருக்கிறார் என்றும், தனது புதிய பணிக்கு வாழ்த்துச் சொன்னார் என்றும் கூறினார். தனது கணவர், மகன், பெற்றோர் மற்றும் அலுவலகப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தையைச் சந்தித்தார் உரோம் புதிய மேயர் Virginia Raggi.

மேலும், Neocatechumenate கத்தோலிக்க இயக்கத்தை ஆரம்பித்த Kiko Arguello அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.

கிறிஸ்தவ விசுவாசத்தில், மக்களை ஆழமாக வேரூன்றச் செய்யும் நோக்கத்தில், இஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில், 1964ம் ஆண்டில், Kiko Argüello, Carmen Hernández ஆகிய இருவரால் Neocatechumenate இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கம், ஒவ்வொரு பங்குத்தளத்திலும், ஐம்பது பேரைக் கொண்ட குழுவாகச் செயல்படுகின்றது. 2007ம் ஆண்டில், உலகில் ஏறத்தாழ நாற்பதாயிரம் Neocatechumenate குழுக்கள் இருந்தன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.