2016-07-01 16:11:00

சோம் என்ற இடத்தில் போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டு


ஜூலை,01,2016. முதல் உலகப் போரின் மிக மோசமான மோதலாகக் கருதப்படும் Somme போர் தொடங்கப்பட்டதன் நூறாமாண்டு நிறைவையொட்டி, ஐரோப்பா முழுவதும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் இவ்வெள்ளியன்று நடைபெற்றன.

1916ம் ஆண்டு ஜூலை முதல் தேதி காலை 7.28 மணிக்கு, பிரான்சும், பிரிட்டனும் சேர்ந்து, ஜெர்மனிக்கு எதிராக, சோம் நதிக்கு அருகே தாக்குதலைத் தொடங்கின. பிரிட்டன் படைகள் முதல் நாளிலேயே, பெரும் இழப்பைச் சந்தித்தன. ஒரே நாளில் 19,240 பிரிட்டன் வீரர்கள் கொல்லப்பட்டனர். அது பிரிட்டன் இராணுவ வரலாற்றில் மிக மோசமான நாளாகப் பார்க்கப்படுகிறது.

போர் தொடங்கிய இந்நேரத்தைக் குறிக்கும் வகையில், பிரிட்டன் முழுவதும் இரண்டு நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஐந்து மாதங்கள் நடைபெற்ற அந்தப் போரில், 4 இலட்சத்து 20 ஆயிரம் பிரித்தானியப்  படையினரும், 2 இலட்சம் பிரான்ஸ் படையினரும், 4 இலட்சத்து 65 ஆயிரம் ஜெர்மன் படையினரும் கொல்லப்பட்டனர்.

உலகில், கடந்த இருநூறு  ஆண்டுகளில் நடந்த போர்களில் மொத்தம் நான்கு கோடிப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.