2016-07-01 16:05:00

கண் தானத்தை ஊக்குவிக்கும் கத்தோலிக்கர்


ஜூலை,01,2016. கண் தானத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கர்நாடக மாநிலத்தின் ஒரு கத்தோலிக்கப் பள்ளியில், “பார்வையற்ற நடை” என்ற ஒரு நடவடிக்கை கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

Gowribidannur புனித Ann பள்ளி வளாகத்தில் இவ்வியாழனன்று நடந்த இந்நிகழ்வில், ஏறக்குறைய 500 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். இருபது நிமிடங்கள் இடம்பெற்ற இந்நிகழ்வில், இவர்கள், துணிகளால் கண்களைக் கட்டிக்கொண்டு, ஒருவர் ஒருவருக்கு உதவிசெய்து நடந்தனர்

பார்வையிழந்தவரின் நிலைகளை, அனுபவத்தால் உணர்ந்து அம்மக்களுக்கு உதவுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது என்று, அப்பள்ளி முதல்வர் அருள்சகோதரி ரெம்யா அவர்கள் கூறினார்.

மேலும், இந்தியாவில் கண் தானத்தை ஊக்குவித்து வரும் கிளேரிசியன் அருள்பணி ஜார்ஜ் கண்ணன்தானம் அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் 35 ஆயிரம் பேர் கண் தானம் வழங்க உறுதியளித்துள்ளனர் என்றார்.

உலகிலுள்ள 3 கோடியே 90 இலட்சம் பார்வையிழந்தவர்களில் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவுக்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் விழி வெண்படலம் மாற்று அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆயினும், முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரையிலான விழி வெண்படலங்களே சேகரிக்கப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டில் 53 ஆயிரம் விழி வெண்படலங்கள் சேகரிக்கப்பட்டன. ஆயினும். 26 ஆயிரம் பேருக்கு மட்டுமே அவற்றை மாற்ற முடிந்தது. மற்றவை சேதமாயின அல்லது பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருந்தன. நாட்டில் 700க்கு அதிகமான கண் தான வங்கிகள் உள்ளன. இப்புள்ளி விபரங்களை அறிவித்தார் அருள்பணி Kannanthanam.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.