2016-07-01 15:48:00

இன்றையத் தொழில் உலகில், நேர்மையின் முக்கியத்துவம்


ஜூலை,01,2016. “இன்றையத் தொழில் உலகில், நேர்மையை வலியுறுத்தும் ஒளிமிக்க பாதை பற்றிக் கற்றுக்கொடுப்பதும், அப்பாதையைப் பின்செல்வதும் இன்றியமையாதது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டன.

மேலும், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளிலுள்ள திருஅவை, நற்செய்தியை மிகுந்த ஆர்வத்துடன் அறிவிக்குமாறு, இந்த ஜூலை மாதத்தில் நாம் செபிக்குமாறு, தனது மறைபரப்புக் கருத்தில் கேட்டுள்ளார் திருத்தந்தை.

தங்களின் தனித்துவமும், வாழ்வும் அச்சுறுத்தப்படும் சூழலை எதிர்கொள்ளும் பூர்வீக இன மக்களுக்குச் சரியான மதிப்பு கொடுக்கப்படும்படியாகச் செபிக்குமாறும், இந்த ஜூலை பொதுக் கருத்தில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், இந்த ஜூலை 3, 10, 17, 24 ஆகிய நான்கு ஞாயிறுகளில், திருத்தந்தையின் நண்பகல் மூவேளை செப உரை இடம்பெறும். புதன் பொது மறைக்கல்வியுரைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6, புதன்கிழமையன்று, பிரான்சின் லியோன் கர்தினால் Philippe Barbarin மற்றும் அவருடன் வரும் 200 நோயாளிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்திப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

31வது உலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, இந்த ஜூலை 27, புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு போலந்து நாட்டுக்குப் புறப்படும் திருத்தந்தை, ஜூலை 31 ஞாயிறு இரவு 8.25 மணிக்கு உரோம் வந்து சேர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.