2016-06-30 15:19:00

லாஸ் ஏஞ்செலஸ் நகரில் அருளாளர் ரொமேரோவின் புனிதப் பண்டங்கள்


ஜூன்,30,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையில் ஜூலை 4ம் தேதி முடியக் கொண்டாடப்பட்டு வரும் மதச் சுதந்திர நாட்களின் ஒரு பகுதியாக அருளாளரான பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் புனிதப் பண்டங்கள் மக்களின் வணக்கத்திற்கென வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராயர் ரொமேரோ அவர்கள் கொல்லப்பட்ட வேளையில் அவர் சிந்திய இரத்தத்தில் தோய்ந்த ஒரு கைக்குட்டை, மற்றும் பேராயர் அடிக்கடி பயன்படுத்தி வந்த 'மைக்' ஆகிய திருப்பண்டங்கள், லாஸ் ஏஞ்செலஸ் நகரின் பேராலயத்தில், ஜூலை 1ம் தேதி முதல் மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்படும் என்று லாஸ் ஏஞ்செலஸ் உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

மத உரிமைக்காகப் போராடிய புனிதர்களான தாமஸ் மூர், ஜான் பிஷர் ஆகியோரின் புனிதப் பண்டங்களுடன், அருளாளர் ரொமேரோ அவர்களின் புனிதப் பண்டங்களும் மக்களின் வணக்கத்திற்கென வைக்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களில், புனிதர்களான தாமஸ் மூர், ஜான் பிஷர் ஆகியோரின் திருநாளுக்கு முந்திய நாளான ஜூன் 21ம் தேதி முதல், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சுதந்திர நாளான ஜூலை 4ம் தேதி முடிய மதச் சுதந்திர நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.