2016-06-30 15:37:00

பாகிஸ்தானில் உரிமை மீறல் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி


ஜூன்,30,2016. பாகிஸ்தானில் மனித உரிமைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் குறித்த புகார்களை அளிக்க, மக்கள், கட்டணமற்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தும் ஒரு புதிய முயற்சியை பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்தியுள்ளார், அந்நாட்டு அமைச்சர் ஒருவர்.

மனித உரிமைகள் துறையின் அமைச்சராகப் பணியாற்றும் கம்ரான் மைக்கிள் (Kamran Michael) அவர்கள், அந்நாட்டில் நிகழும் மனித உரிமை மீறல் குற்றங்களைத் தடுக்க இந்த புதிய முயற்சியை அந்நாட்டு பாராளுமன்றத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தினார்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு இந்த முயற்சி பெரிதும் உதவும் என்று அமைச்சர் கம்ரான் மைக்கிள் அவர்கள், பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள், குழந்தைகள், வயதானோர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய அனைவருக்கும் உரிய மனித மாண்பை நிலைநாட்ட, பாகிஸ்தான் பெரும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று அமைச்சர் கம்ரான் மைக்கிள் அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.