2016-06-30 15:35:00

திருத்தந்தை-செயலில் காட்டப்படாத இரக்கம் உயிரற்றதாயிருக்கும்


ஜூன்,30,2016. அன்பு இதயங்களே, ஐரோப்பாவில் கோடை காலம் ஆரம்பமாகிவிட்டதை காலநிலை உணர்த்தி வருகிறது. மக்கள் கோடை விடுமுறையையும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். இக்கோடையில் ஜூலை மாதத்தில் திருத்தந்தையின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரைகள் இடம்பெறுவதில்லை. இந்த ஜூலையிலும்,  திருத்தந்தையின் மறைக்கல்வியுரை நடைபெறாது. மேலும், கத்தோலிக்கத் திருஅவையில், கடந்த டிசம்பர் 8ம் தேதியிலிருந்து சிறப்பிக்கப்பட்டுவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மாதமும், ஒரு சனிக்கிழமையன்று சிறப்பு யூபிலி பொது மறைக்கல்வியுரை வழங்கி வருகிறார். இந்த சிறப்பு யூபிலி மறைக்கல்வியுரை இந்த ஜூன் 18, சனிக்கிழமையன்று நடந்தது. இந்த ஜூனில், மற்றொருமொரு சிறப்பு யூபிலி மறைக்கல்வியுரை ஜூன் 30, இவ்வியாழன் காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, இதில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு, இரக்கச் செயல்கள் ஆற்றுவதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்  திருத்தந்தை பிரான்சிஸ். ஆண்டவர், மக்களினத்தார் அனைவருக்கும் இறுதித் தீர்ப்பு வழங்கும்போது, அத்தீர்ப்பு எவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் என்பது, மத்தேயு நற்செய்தி 25ம் பிரிவில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மறைக்கல்வியுரையில், இந்தப் பகுதியை மையப்படுத்திப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதர, சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் எனது காலை வணக்கம். இந்த யூபிலி ஆண்டின் ஆரம்ப மாதங்களில், இரக்கச் செயல்கள் குறித்து எத்தனையோ முறைகள் பேசப்பட்டதை நாம் கேட்டிருக்கிறோம். நம் மனச்சாட்சியைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு இன்று நம்மை நம் ஆண்டவர் அழைக்கிறார். உண்மையில், இரக்கம் என்பது, புலனாகாத ஒரு சொல் அல்ல, அது ஒரு வாழ்வுமுறை என்பதை மறக்காமல் இருப்பது நல்லது என, இத்தாலியத்தில் தனது மறைக்கல்வியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், கடவுளின் இரக்கத்தின் கொடைகளை மட்டுமல்லாமல், நம் கிறிஸ்தவ வாழ்வின் ஓர் அங்கமாக நடைமுறைபடுத்துவதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ள இரக்கச் செயல்கள் குறித்தும் நோக்கி வருகிறோம். இதனை தூய யாக்கோபு, செயலில் காட்டப்படாத இரக்கம் உயிரற்றதாயிருக்கும்(cfr யாக்.2,14-17) என, இரத்தின சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். நம் இறைத்தந்தையைப் போல இரக்கமுடையவர்களாக நாம் இருக்க வேண்டுமானால், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் பொருளாதார மற்றும் ஆன்மீகத் தேவைகளைப் புரிந்துகொண்டு தொடர்ந்து செயலாற்ற வேண்டும். இரக்கச் செயல்களால் நாம் தீர்ப்பிடப்படுவோம் என்பதை இயேசுவும் சில சொற்களால் நமக்குச் சொல்கின்றார். ஏழைகள், பசித்திருப்போர், தாகமாயிருப்போர், ஆடையின்றி இருப்போர், அன்னியர், நோயாளர் மற்றும் சிறையில் இருப்போர்க்கு நாம் இரக்கம் காட்டுவதை வைத்து(cfr மத்.25,35-36) இறுதித் தீர்ப்பின்போது தீர்ப்பிடப்படுவோம் என இயேசு சொல்கிறார். பசியாய் இருப்பவர் முன்னிலையில் நீங்கள் வேறு ஏதாவது செய்து கொண்டிருக்க முடியாது. அவருக்குச் சாப்பிடுவதற்கு கொடுக்கத்தான் வேண்டும். இரக்கச் செயல்கள், கொள்கையளவில் இருப்பதல்ல, மாறாக, அவை தெளிவான செயல்களால் வெளிப்படுத்தப்பட வேண்டும். துன்பங்களைக் களையும் பணி செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, நம் வளமான சமுதாயங்களில், ஏராளமான நம் சகோதர சகோதரிகளின் விண்ணப்பங்களைப் புறக்கணிக்கும் சோதனைக்கு எதிராக, காத்துக்கொள்வதற்குக் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். வேகமாக மாறிவரும் மற்றும் தாராளமயமாக்கல் அதிகரித்துவரும் நம் உலகில், வறுமையின் பல புது வடிவங்கள் தோன்றுகின்றன. சில பொருளாதார மற்றும் ஆன்மீக வறுமைகள் பெருகி வருகின்றன. இவைகளுக்குப் பதிலளிப்பதற்கு, பிறரன்புப் பணிகளின் புதிய மற்றும் தெளிவான நடைமுறைகளை உருவாக்குவோமாக. இவ்வாறு, இரக்கத்தின் பாதைகள் எப்போதும் மிகத் தெளிவானதாக அமையும்.

இவ்வாறு இந்த யூபிலி மறைக்கல்வியுரையில், இரக்கச் செயல்கள் ஆற்றுவது பற்றிப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 24 முதல் 26 வரை (ஜூன் 24-26) மேற்கொண்ட அர்மேனியத் திருத்தூதுப் பயணம் பற்றியும் பேசினார். இந்தியா, சீனா, இந்தோனேசியா, வியட்நாம் உட்பட இந்த சிறப்பு யூபிலி மறைக்கல்வியுரையில் கலந்துகொண்டவர்களை வாழ்த்தினார். இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டு, இப்பயணிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் அருளின் மற்றும் ஆன்மீகப் புதுப்பித்தலின் காலமாக இருப்பதற்கு, தனது செபம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை. இவர்கள் எல்லார் மீதும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும், அமைதியும் பொழியப்படச் செபித்து, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.