2016-06-30 15:33:00

காஷ்மீரில் மது விலக்கை வலியுறுத்தும் மதத் தலைவர்கள்


ஜூன்,30,2016. காஷ்மீர் மாநிலத்தில் பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்த பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு கத்தோலிக்க தலத்திருஅவை தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பூரண மது விலக்கு, தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்பதால், அதை நடைமுறைப்படுத்த முடியாது என்று அம்மாநில நிதி அமைச்சர், Haseeb Drabu அவர்கள் கூறியதற்கு மதத் தலைவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

பூரண மது விலக்கைக் கொணர்வதால், தனி மனிதர்களின் உடல் நலம் மேம்படுவது மட்டுமல்லாமல், குடும்பங்களில் நிகழும் கொடுமைகளும் முடிவுக்கு வரும் என்று, காஷ்மீர் கத்தோலிக்க சமூகப்பணி மையத்தின் இயக்குனர், அருள்பணி Shaiju Chacko அவர்கள் தெரிவித்துள்ளார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

பல்வேறு மத அமைப்புக்கள் ஒருங்கிணைந்து ஜுன் 28, இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்தியாவில் பீஹார், குஜராத் ஆகிய மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது எனில், காஷ்மீரில் அதனை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.