2016-06-29 16:49:00

திருத்தந்தையின் மறையுரை : மனச் சிறைகளிலிருந்து விடுதலை


ஜூன், 29,2016. புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் விழாவாகிய இப்புதனன்று தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மியான்மார் உட்பட, பல நாடுகளைச் சேர்ந்த 25 புதிய பேராயர்களுக்கு, பால்யம் என்ற கழுத்துப்பட்டையை அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய பேதுருவுக்கு இயேசு வழங்கிய 'திறவுகோல்' என்ற அடையாளத்தை மையப்பொருளாகக் கொண்டு, 'திறத்தல், மூடுதல்' என்பவற்றிற்கிடையே இருக்கும் முரண்பாட்டைக் குறித்து எடுத்துரைத்தார்.

'திருத்தூதர் பணிகள்' நூலின் 12ம் பிரிவு துவக்கப்பகுதியில், மூடுதல் குறித்த மூன்று எடுத்துக்காட்டுக்களைக் காண்கிறோம். தூய பேதுரு சிறையில் அடைக்கப்படுகிறார், திருஅவையோ மூடிய கதவுகளுக்குப் பின்னால் அவருக்காக உருக்கமாக செபிக்கிறது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேதுருவோ, மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டுகிறார். மூடியுள்ளது குறித்த இந்த மூன்று எடுத்துக்காட்டுகளிலும், செபம் என்பதே, மூடியவைகளிலிருந்து வெளியேறுவதற்கான முக்கிய வழி என காண்பிக்கப்படுகிறது.

சித்ரவதைகளிலிருந்தும் அச்சத்திலிருந்தும் சமூகங்கள் வெளிவருவதற்கு செபமே உதவுகிறது. கிறிஸ்தவ சமூகத்தின் செபத்தினாலேயே இறைவனின் தூதர் பேதுருவை சிறையிலிருந்து விடுவித்து, அவரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறார். புனித பவுலும், விடுதலை குறித்த தன் அனுபவங்களை திமொத்தேயுவுக்கு எழுதியுள்ளார். நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியில் இயேசு தன்னோடு துணை நின்று, தனக்கு வலிமையை வழங்கினார் என கூறுகிறார் புனித பவுல். புனித பேதுருவைப் பார்த்தோமானால், விசுவாச அருளை அவர் இறைவனிடமிருந்து பெற்றவுடன், தனக்கென இருந்த அனைத்தையும் துறந்துவிட்டு முன்செல்கிறார். விடுதலை நோக்கிய அவரின் இந்த பயணத்தில், அவருக்கான இயேசுவின் செபம் முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக உள்ளது. 'நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன்' என பேதுருவிடம் கூறுகிறார் இயேசு. இதுபோல், இயேசுவை பேதுரு மறுதலித்தபோது, இயேசு அவரை கூர்ந்து நோக்கியதையும், தன் தவறை உணர்ந்து பேதுரு மனம் நொந்து அழுததையும் இங்கு நாம் குறிப்பிடலாம். மனம் நொந்து அழுத அந்த வேளையில், சுயநலத் தற்பெருமை, அச்சம் போன்றவைகளிலிருந்து விடுதலைப் பெற்ற பேதுரு, தன்னையே மூடிக்கொள்ள, தனக்குள்ளிருந்த சோதனையிலிருந்து விடுதலைப் பெற்று, இயேசுவின் சிலுவைப் பாதையை தானும் எடுத்துக்கொள்கிறார்.

                ஏரோதின் சிறையிலிருந்து வானதூதர் வழியாக விடுதலைப் பெற்று, மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் கதவை பேதுரு தட்டியபோது, ரோதி என்ற பணிப்பெண், கதவைத் திறக்காமல், உள்ளே ஓடிச்சென்று அங்கு செபித்துக் கொண்டிருந்தவர்களிடம், பேதுரு வந்திருக்கும் விவரத்தைக் கூறுகிறார். இந்தச் செயல் நமக்கு சிறிது வினோதமான ஒன்றாகத் தெரிகின்றபோதிலும், அக்காலக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு அச்சத்துடன் மூடிய கதவுகளுக்குள் வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆபத்துச் சூழல்களில் தன்னை இறுக்க மூடி காத்துக்கொள்ள திருஅவைக்கு வரும் சோதனையின் எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு உள்ளது. ஆனால் அதேவேளை, சிறிய திறப்புகள் வழியாகவும் இறைவன் செயலாற்றுவதை நாம் காண்கிறோம்.  மூடியிருப்பவைகளிலிருந்து திறந்தவெளிக்கும், அச்சத்திலிருந்து மன உறுதிக்கும், சோகத்திலிருந்து மகிழ்வுக்கும், பிரிவினைகளிலிருந்து ஒன்றிப்பிற்கும் வழிகளைத் திறக்க செபம் உதவுகிறது. கிறிஸ்தவ ஒன்றிப்பு கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயுவின் பிரதிநிதிகள் பங்குபெறும் இந்த விழாக் கொண்டாட்ட வேளையில், ஒன்றிப்பு குறித்த வார்த்தைகளை உறுதியாகக் கூறமுடியும். விடுதலை அளிக்கும் இறைச்செயலின் அனுபவத்தில் நாம் சாட்சிகளாக முன்னோக்கி நடைபோட, புனிதர்கள் பேதுருவும் பவுலும் நமக்காக இறைஞ்சுவார்களாக. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.