2016-06-29 16:01:00

ஈராக் நாட்டின் நினிவே பள்ளத்தாக்கில் புதிய ஆலயம்


ஜூன்,29,2016. ஈராக் நாட்டின் எர்பில் புறநகர் பகுதியில் அன்காவா எனுமிடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒரு புதிய ஆலயத்தை, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை லூயிஸ் ரபேல் சாக்கோ அவர்கள், ஜுன் 27, கடந்த திங்களன்று அர்ச்சித்தார்.

இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் ISIS கட்டுப்பாட்டில் சிக்குண்டிருந்த நினிவே பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம், இடைவிடாத சகாய அன்னையின் பெயரால் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களின் நிதி உதவி கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலய அர்ச்சிப்பு நிகழ்ச்சியில், ஈராக், ஜோர்டன் நாடுகளின் திருப்பீட தூதர், பேராயர் Alberto Orega Martin அவர்களும், ஆயர் Bashar Warda அவர்களும் கலந்துகொண்டனர்.

ஈராக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்குப் பயந்து, கிறிஸ்தவர்கள் அப்பகுதியைவிட்டு வெளியேறும் சூழலில், இக்கோவில் உருவாகியிருப்பது, ஈராக்கில் கிறிஸ்தவ மறை வளர்வதற்கு நம்பிக்கை தரும் ஓர் அடையாளமாக உள்ளது என்று முதுபெரும் தந்தை, சாக்கோ அவர்கள் Fides செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.