2016-06-29 16:07:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 5


ஜூன்,29,2016.  “ஒருவர் பிறர் இலட்சியத்திற்காக உயிர் துறக்க முடியும், ஆனால், அவர் வாழ்வதானால், தன் இலட்சியத்திற்காகவே வாழ வேண்டும்” என்றார் இப்சன். டார்ஜிலிங்கில் ஓய்வெடுத்து உடல்நலம் தேறி, கொல்கத்தா திரும்பிய அன்னை தெரேசா அவர்களை அனைத்துச் சகோதரிகளும் மகிழ்வுடன் வரவேற்றனர். ஆனால் அன்னையோ தனது உயரிய இலட்சியத்தை மனதில் சுமந்து திரும்பி வந்தார். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குத் தயாரானார். வழக்கம்போல் பள்ளி வேலையில் தன்னால் ஈடுபட இயலாது என்பதை உணர்ந்தார். அந்த இயலாமை மனதிற்குப் பிடித்த இழப்பாகவே இருந்தது. பறந்து கிடக்கும் உலகில் கண்ணெதிரேச் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற கைவிடப்பட்டவர்கள் தன்னைக் கையேந்தி அழைப்பதாக உணர்ந்தார். இப்படி இறைவன் என்னை வெளியே நின்று அழைக்கும்போது எப்படி அதற்கு மறுப்புச் சொல்ல முடியும் என நினைத்தார். அன்னை தெரேசா திரும்பி வந்துவிட்டதை அறிந்த அருள்பணி வேன் அவர்கள், அருள்சகோதரிகள் இல்லம் சென்றார். அன்னையும் இரயிலில் தனக்குக் கிடைத்த அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டார். அன்று இரயிலில் தான் எழுதிய துண்டுக் காகிதங்களையும் அவரிடம் கொடுத்துவிட்டு அவரின் பதிலுக்காகக் காத்திருந்தார்.

அக்காகிதங்களைப் படித்துப் பார்த்த அருள்பணி வேன் அவர்கள், கொல்கத்தா பேராயரிடம் இது பற்றி அறிவிக்க வேண்டும் என்றார். அந்தப் பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். ஆனால் பேராயரைச் சந்தித்து விபரங்களை விளக்கியபோது அதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அருள்சகோதரி தெரேசாவுக்கு புதிய சபை ஒன்று தொடங்குவதற்கான உடல்நலமோ, அதற்கான தகுதியோ இல்லை என்றார். அசுரவேகத்தில் புதிய சபை ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்த அன்னையிடம் பேராயர் கூறியவற்றைச் சொல்வதற்கு அந்த அருள்பணியாளருக்கு மனமில்லை. எனவே, அன்னையையே நேரிடையாகக் கடிதம் எழுதுமாறு கூறினார். அன்னையும் பேராயருக்குத் தனது திட்டங்களையும், இலட்சியங்களையும் விளக்கி கடிதம் எழுதினார். அதை வாசித்துப் பார்த்த பேராயர் கடும் கோபம் கொண்டார். டப்ளின் நகரிலிருந்த லொரேத்தோ சபை தலைமைச் சகோதரிக்கு இது அறிவிக்கப்பட்டது. அவரும் கோபம் கொண்டு, அன்னையை, அச்சபையின் அசென்சால் கன்னியர் இல்லத்திற்குச் செல்லுமாறு உத்தரவிட்டார். அன்னையின் இந்த அசட்டு எண்ணத்தை மறக்கடிக்க வேண்டும் என்பதே சபைத் தலைவரின் நோக்கம். அன்னையும் அதற்குப் பணிந்து சென்றார். ஆனால் பேராயருக்கு இதில் விருப்பமில்லை. ஏனென்றால் பேராயர் கோபம் கொண்டது எல்லாமே, அன்னையின் நோக்கம் உண்மையானதா என்பதை அறிவதற்காகவே. அதனால் அருள்பணி வேன் அவர்களை அழைத்து அன்னையின் ஆன்மீக வாழ்வைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறினார்.

கடவுள் விருப்பம் ஒன்றாக இருந்தால் அதற்கு யாரும் வேலி போட முடியாது. அசென்சால் கன்னியர் இல்லத்தில் தான் மகிழ்வோடு இருப்பதாகக் கடிதம் எழுதினார் அன்னை. பின்னர் அன்னை அருள்பணி வேன் அவர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதினார். அன்னையின் ஆன்மீக வழிகாட்டிக்கு ஒன்று மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தது. எவ்வளவு எதிர்ப்புகள் எதிர்வந்தாலும், அன்னை தனது இலட்சியத்தில் மாறமாட்டார் என்பது உறுதியானது. “ரோஜா செடியில் முள் இருப்பதற்கு வருந்தாதே. ஆனால் முட்செடியில் அழகிய மலர் இருப்பதற்கு மகிழ்வாயாக” என்ற கூற்றுப்படி, அன்னை தனது எண்ணத்தில் உறுதியாய் இருந்தார். வத்திக்கானில் திருத்தந்தை, கொல்கத்தா பேராயர், லொரேத்தோ சபை தலைமைச் சகோதரி ஆகிய மூவரிடமிருந்து அன்னைக்கு அனுமதி தேவைப்பட்டது. கொல்கத்தா பேராயரின் முயற்சியால், அன்னை மீண்டும் என்டேலிக்கு வந்துவிட்டார். பேராயர் கூறியபடி, அன்னை தனது விருப்பத்தைத் தெரிவித்து வத்திக்கானுக்கும், சபைத் தலைமைக்கும் கடிதம் எழுதினார். அது 1948ம் ஆண்டு சனவரி மாதம். பதில்கள் வரத் தாமதமானது. நான் என் கடமையைச் சரிவரச் செய்துவிட்டேன். அது நியாயமானதாக இருந்தால் இறைவன் நிறைவேற்றி வைப்பார் என்று அமைதியாகக் காத்திருந்தார் அன்னை. 1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வத்திக்கானிலிருந்து சாதகமான பதில் வந்தது. இதை கொல்கத்தா பேராயர், அருள்பணி வேன் அவர்கள் வழியாக அன்னைக்கு அறிவித்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அன்னையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. நிதானமாக அதைப் படித்த அன்னை, அப்படியானால், நான் இப்பொழுதே சேரிக்குச் செல்லலாம் அல்லவா என்று மகிழ்வுடன் கேட்டார். அதன்பின்னர் காரியங்கள் வேகமாக நடந்தன. 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி. லொரேத்தோ சபை ஆடையிலிருந்து மாறி, ஒரு சாதாரண வங்காளப் பெண் உடுத்தும் சேலையை உடுத்தினார் அன்னை. தனது புதிய பணிக்குத் தேவையான மருத்துவப் பயிற்சிக்காகப் பேராயர் அவரை பாட்னாவுக்கு அனுப்பினார். அன்னை தெரேசா சபையைவிட்டு விலகுவதை தன் சபை சகோதரிகளுக்கு அறிவித்த சபைத் தலைவர், “போற்றவும் வேண்டாம், தூற்றவும் வேண்டாம், செபியுங்கள்” என எழுதியிருந்தார். பாட்னா சென்ற அன்னை தெரேசா, மூன்றே மாதங்களில் பயிற்சியை சிறப்பாக முடித்து கொல்கத்தா திரும்பினார். 1949ம் ஆண்டு டிசம்பர் 21ம் நாள். கொல்கத்தாவின் பிரபலமான மோத்தஜில் சேரியில் காலடி பதித்தார். உள்ளே நுழைந்ததுமே சுறுசுறுப்புடன் சேரியைச் சுற்றிப் பார்த்தார். அங்கு வாழ்ந்த மக்களுக்கு அன்னையைத் தெரியாது. சேரியின் மத்தியில் காலியாக இருந்த ஒரு குடிசையில் வாடகைக்குக் குடியேறினார். கண்ணுக்கு எட்டிய தூரம்வரைத் தெரிந்த குப்பைக் கூளங்களை உடனடியாகச் சுத்தம் செய்தார். பிறரைப் புரிந்துகொண்டு பணியைத் தொடங்கினார் அன்னை தெரேசா. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.