2016-06-28 16:03:00

முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு திருத்தந்தைக்கு கடிதம்


ஜூன்,28,2016. கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்புச் சபைப் பிரதிநிதிகள் குழு வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு.

கிரேக்க நாட்டு லெஸ்போஸ் தீவில், பேராயர் 2ம் Ieronymos அவர்களுடன் திருத்தந்தையைச் சந்தித்ததை மிகுந்த நன்றியுணர்வுடன் நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டுள்ள, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், புலம்பெயர்ந்தவர் மற்றும் அகதிகளின் துன்பங்களை அகற்றுவதற்கு, கிறிஸ்தவ சபைகள் துணிச்சலுடன் எடுத்துவரும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொன்மையான கிறிஸ்தவக் கோட்பாடுகளான, உடன்பிறப்பு உணர்வு மற்றும் சமூக நீதியின் அடிப்படையில், புலம்பெயர்ந்தவர் மற்றும் அகதிகள் பிரச்சனையை ஐரோப்பிய நாடுகள் அணுக வேண்டுமென்றும், கிறிஸ்தவ மூலங்களின்றி ஐரோப்பியப் பண்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Laudato Si’ சுற்றுச்சூழல் குறித்த திருமடல், பரவலாகப் பாராட்டைப் பெற்று, பொதுவான நம் இல்லத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார் அவர்.   

கத்தோலிக்கருக்கும், ஆர்த்தடாக்ஸ் சபையினருக்கும் இடையே இடம்பெறும் இறையியல் உரையாடல்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதையும், இது தொடரப்படும் என்பதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு.

கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபை, திருத்தூதர் பேதுருவின் சகோதரரான அந்திரேயாவால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இக்கிறிஸ்தவ ஒன்றிப்புச் சபையின் பாதுகாவலர் திருத்தூதர் அந்திரேயா ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.